கிறிஸ்டல் மெதாம்பெடமின் (crystal methamphetamine) படிக்கவே கஷ்டமாக இருக்கும் இது ஒரு போதைப்பொருள். கோடிக்கணக்கில் பணம் புரளும் சமாச்சாரம். கிராம் கணக்கில் வாங்கவே திண்டாட்டம் இருக்கும் நிலையில் 123 கிலோ கிறிஸ்டல் மெதாம்பெடமினை துறைமுகம் வழியாக ஒரு கும்பல் அமீரகத்திற்கு அனுப்பியிருக்கிறது.
கண்டெய்னரில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குக் கீழே இந்த போதை வஸ்து மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஷார்ஜா சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருள் அலேக்காக தூக்கப்பட்டிருக்கிறது.
ஆசிய நாடு ஒன்றில் இருந்து வந்த இந்த கண்டெய்னரில் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெல்டு அடிக்கப்பட்ட தடம் வெளியே தெளிவாகத் தெரிந்திருக்கிறது. உடனடியாக இரும்பு சட்டத்தை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். ஆறு சட்டங்களை அகற்றிய பின்னர் உள்ளே இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
குளிர்சாதனப் பெட்டியின் கீழே விவரமாக பொருளைப் பதுக்கி கடைசியில் மண்டைக்கு மேலே இருந்த கொண்டையை மறைக்க மறந்த கதையாய் பொருள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது.
இதுகுறித்துப் பேசிய சுங்கத்துறை ஆணையர் மற்றும் பெடரல் சுங்கத்துறை ஆணையத்தின் தலைவரான அலி சயீத் மட்டார் அல்நியேதி (Ali Saeed Mattar Alneyadi),” நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொருட்களை கண்டறிந்த கடல் துறைமுகங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஃப்ரீ ஸோன் ஆணையத்திற்கு (Free Zones Authority) வாழ்த்துக்கள். மாநில சுங்கத் துறையால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை முயற்சிகள் அமீரக இளைஞர்களைக் குறிவைக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் ஏற்படும் ஆபத்தின் அளவைக் குறைக்கின்றன. அதே நேரத்தில், இது அமீரக சுங்கத்துறையின் விழிப்புணர்வையும், போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதில் உள்ள சவாலையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது” என்றார்.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் போதைப்பொருள் கைப்பற்றல் பதிவுகளின் அடிப்படையில் அமீரகத்திலேயே ஷார்ஜா முன்னிலை வகிக்கிறது. அதாவது இந்த காலகட்டத்தில் அமீரகத்தில் பதிவான மொத்த போதைப்பொருள் கைப்பற்றலில் ஷார்ஜா சுங்கத்துறை மட்டும் 63 சதவீதத்தை மேற்கொண்டுள்ளது என ஆணையர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு அமீரகம் முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் ஷார்ஜா காவல்துறையின் பங்கு 39 சதவீதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.