39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

ஷார்ஜாவில் அதிர்ச்சி: கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த இரண்டு பொறியாளர்கள்..

deadbody

ஷார்ஜாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஒரு மசூதிக்கு அருகிலிருந்து, இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிவயிற்றில் பல குத்து காயங்களுடன் கேரவன் ஒன்றில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இருவரும் சூடான் நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

இருவரது உடல்களுக்கு அருகிலும் ரத்தக் கறை படிந்த 2 கத்திகள் கிடந்துள்ளன. இது குறித்து ஷார்ஜா போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துள்ள இருவருமே 40 வயதானவர்கள் மற்றும் சாலை கட்டுமான ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் லேபர் சூப்பர்வைசராக பணிபற்றி வந்துள்ளனர். சம்பவ இடத்தில நடத்தப்பட்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணையில், மரணித்துள்ள இருவரும், தங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இருப்பினும் மர்ம நபர்கள் யாரேனும் திட்டமிட்டு இரட்டைக் கொலையை நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தை காவல்துறையினர் நிராகரிக்கவில்லை. கண்டெடுக்கப்பட்டுள்ள இருவரது உடலிலும் தலா 8 குத்து காயங்கள் இருந்துள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள் இது குறித்து கூறுகையில், ” தற்போது பலியாகியுள்ள இருவருமே நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.

கடைசியாக இருவரும் ஒரு அதிகாலை நேரத்தில் கட்டுமான பணிகளை சரி பார்க்கவும், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை சந்திக்கவும் சென்றனர். காலை தொழுகையையும் இருவரும் ஒன்றாகவே செய்துள்ளனர். பின்னர் இருவரும் ஒன்றாகவே டீ குடித்துள்ளனர். எப்போதுமே அவர்களுக்கு இடையே தகராறோ, வாக்குவாதமோ ஏற்பட்டதில்லை. ஆகையால் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதற்கான சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இறந்த இருவரது உடல்களை தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றியுள்ள காவல்துறையினர், குற்றம் நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!