UAE Tamil Web

துபாயில் அதிரடி: சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டி வந்த இரு சிறுவர்கள் கைது..

dubai

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய மற்றும் வேண்டுமென்றே போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதிய 2 சிறார்களை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது.

- Advertisment -

14 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டியது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்த ரஷீதியா காவல் நிலைய இயக்குநரான பிரிகேடியர் ஜெனரல் சயீத் ஹமாத் பின் சுலைமான் அல் மாலிக், அல் வர்காவில் அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட வாகனத்தை ரோந்து போலீஸார் கவனித்ததாகவும், வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதிலும், அதை ஒட்டி வந்த மைனர் சிறுவன் போலீஸாரின் உத்தரவை பின்பற்ற மறுத்து வாகனத்தை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல், போலீஸ் பேட்ரோல் மீது வேண்டுமென்றே மோதியதாகவும் கூறியுள்ளார். சிறுவனின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக அவரது உயிருக்கு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

பின்னர் போலீஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் அந்த சிறுவன் வாகனத்தை சாலையின் எதிர் திசையில் ஓட்டினான். இந்த சம்பவம் குறிப்பிட்ட வாகனத்தில் இருந்த 2 சிறுவர்கள் மற்றும் சாலையில் சென்ற மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்தது. பின்னர் போலீஸ் பேட்ரோல் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. அதில் வாகனத்தை ஒட்டிய 14 வயது சிறுவனோடு, 15 வயது சிறுவன் ஒருவனும் இருந்துள்ளான். பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஒட்டி வந்த அந்த சிறுவன், தனது சகோதரரின் வாகனத்தை அவரிடம் சொல்லாமல் எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் எளிதாக எடுக்கும் வகையில் வாகனங்களின் சாவியை வைக்க வேண்டாம் என்று குடும்பத்தினரை அதிகாரி அல் மாலிக் வலியுறுத்தியுள்ளார். சிறார்கள் சட்டவிரோதமாக வாகனங்களை இயக்குவதன் காரணமாக கடுமையான விளைவுகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இழப்பு ஏற்படுகிறது, குறிப்பாக அவர்களின் செயல் போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தும் போது அவர்கள் தங்களோடு சேர்த்து மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.