UAE Tamil Web

380 கிலோ கஞ்சா, 4 லட்சம் போதை மாத்திரைகள் – அபுதாபி காவல்துறைக்குக் கிடைத்த இரகசியத் தகவல்..!

hashish seized

“அபுதாபிக்குள் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகளவில் போதைப்பொருள்களை விற்கும் நோக்கத்தோடு ஒரு கும்பல் செயல்படுகிறது” என அபுதாபி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கும்பலைப் பற்றிய சில முக்கியத் தகவல்களும் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisment -

இதனையடுத்து போதைமருத்து தடுப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 380 கிலோ கஞ்சா, 4 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் பிற போதை வஸ்துக்களை பதுக்கி வைத்திருந்த கும்பல் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறது.

அபுதாபி காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவின் கீழ் உள்ள போதை மருந்து தடுப்பு இயக்குனரகத்தின் தலைமை இயக்குனரான கர்னல் தாஹீர் காரிப் அல் தஹேரி (Taher Gharib Al Dhaheri) இதுகுறித்துப் பேசுகையில்,” அபுதாபிக்குள் குறிப்பாக இளைஞர்களிடத்தில் போதை மருந்துகளை பரப்ப முயற்சித்த கும்பலிடம் இருந்து அதிகளவு போதைப்பொருட்கள் சிக்கியுள்ளன. குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வினியோகித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டதாக தஹேரி குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் வழக்கானது மேற்கட்ட விசாரணைகளுக்காக பொது வழக்குத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அபுதாபி காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குனரான பிரிகேடியர் ஜெனரல் முகமது சுஹைல் அல் ரஷீதி (Muhammad Suhail Al Rashidi),” அமீரகத்திற்கு வெளியே இயங்கும் ஒரு கும்பலிடம் இருந்து இந்த போதை மருந்துகள் அமீரகத்திற்குள் வந்திருக்கின்றன. இளைஞர்களை குறிவைத்து போதை மருந்து விற்பனையை நிகழ்த்திவந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்” என்றார்.

போதைப்பொருள் விற்பனையை மேற்கொள்ளும் கும்பலை ஒடுக்க, போதைப்பொருள் ஒழிப்புத் துறை அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.