UAE Tamil Web

கோவிட்19: ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்ததாக பரப்பப்பட்ட வதந்தி.! சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்..

fake

கோவிட் -19 தொற்று காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்து விட்டதாக தவறான தகவலை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை சிறையில் அடைக்க அபுதாபி ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக WAM செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

- Advertisment -

கடந்த ஆகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் இறந்துவிட்டதாக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய செய்தியை மறுத்து, இது வதந்தி என்று அப்போதே தெளிவுபடுத்தியது தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம்(NCEMA).

இது தொடர்பாக அபுதாபி விளையாட்டு சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் ஜோடிக்கப்பட்டது, அதில் உண்மையில்லை. மேலும் குறிப்பிட்ட சேனலில் சொல்லியது போல குடும்பம் ஒன்று இல்லவே இல்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில், முதன்மை குற்றவாளியாக கருதப்படும் நபர் முற்றிலும் கற்பனையாக உருவாக்கிய கதை இது என்று NCEMA அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் சைஃப் அல் தஹேரி கடந்த ஆகஸ்டில் கூறி இருந்தார்.

வதந்தி பரப்பிய வழக்கில் தவறான தகவல்களை வழங்கியதாக ஒரு நபரும், குறிப்பிட்ட சேனல் நிருபர் இரண்டாவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். நிருபர் தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மைதானா என்று சரிபார்க்க தவறிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடைய தொற்றால் ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்து விட்டதாக நேரலையில் தெரிவித்ததற்காக சம்பந்தப்பட்ட அபுதாபி சேனல் தனது பார்வையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. அந்த விவரங்களை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூறியதாகவும் மன்னிப்பு கேட்ட போது குறிப்பிட்ட சேனல் தகவல் தெரிவித்தது.

ஊடகங்களில் தனது கடமைகளை பொறுப்பற்ற முறையில் செய்யும் எவரையும் பப்ளிக் பிராசிகியூஷன் பொறுத்துக்கொள்ளாது, அந்த சமயங்களில் சட்டம் உறுதியாகவும், தீர்க்கமாகவும் நடைமுறைப்படுத்தும் என்று அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் வழக்கு விசாரணையின் செயல் தலைவர் சலீம் அல் ஜாபி முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் கொரோனா மரணம் தொடர்பாக வதந்தி பரப்பிய இருவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.