UAE Tamil Web

கிடங்கிலிருந்து 150,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள முகக்கவசங்களை கொள்ளையடித்த 6 பேர்.! துபாய் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..

court

துபாயில் கிடங்கு ஒன்றினுள் நுழைந்து சுமார் 156,000 முகக்கவசங்களை திருடிய 6 பேர் அடங்கிய கும்பலுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கடந்த ஜூன் மாதம் அல் ரஷீதியா பகுதியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு ஆண்கள் 150,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள முகக்கவசங்கள் அடங்கிய 156 பெட்டிகளை திருடி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை முதல் நிகழ்வு துபாய் நீதிமன்றம் விசாரித்தது.

உத்தியோகபூர்வ பதிவுகளின்படி, 38 வயதான சீன ஊழியர் ஒரு நாள் காலை குறிப்பிட்ட கிடங்கிற்கு வந்த போது 150,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள முகக்கவசங்கள் அடங்கிய 156 பெட்டிகள் கொள்ளை போனதை கண்டறிந்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் தலா 1,000 முகக்கவசங்கள் இருந்தன. கிடங்கு பூட்டை யாரோ உடைத்து உள்நுழைந்துள்ளதாகவும் அந்த சீன ஊழியர் கூறி இருந்தார்.

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாலை 2 மணியளவில் கிடங்கு கதவின் பூட்டை சுத்தியலால் உடைத்து, உள்ளே சென்று முகக்கவசங்களை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டனர்.

பிரதிவாதிகள் கொள்ளையடித்த முகக்கவசங்களை பங்களாதேஷை சேர்ந்த ஒருவரிடம் விற்றதாகவும், கொள்ளை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய கருவிகளை பிரதிவாதிகளில் ஒருவருக்கு சொந்தமான காரில் கண்டுபிடித்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முகக்கவச திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கும்பலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 150,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறைவாசம் முடிந்ததும் அவர்களை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.