UAE Tamil Web

லேடி கெட்டப்பில் சென்று வில்லாவில் கொள்ளையடித்த பலே ஆசாமி கைது..!

thieves

துபாயில் உள்ள வில்லா ஒன்றில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் அபயா மற்றும் நிக்காவை அணிந்து கொள்ளையடித்திருக்கிறார். லேடி கெட்டப்பில் சென்று பொருட்களை ஆட்டயைப்போட்ட ஆளை துபாய் காவல்துறை தந்திரமாகப் பிடித்திருக்கிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டதால் சிதறிக்கிடந்த துகள்களைப் பார்த்திருக்கின்றனர்.

கூர்மையான ஆயுதம் கொண்டு, லாக்கரை உடைக்க முயற்சி நடந்திருக்கிறது. காப்பரால் செய்யப்பட்ட லாக்கரை சிறிய ரம்பம் கொண்டு அறுத்திருப்பதாக தடயவியல் துறை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

இதுகுறித்து குறிப்பிட்ட சில சந்தேகத்திற்கு இடமான நபர்களை காவல்துறை சுற்றிவளைத்திருக்கிறது. அதில் ஒருவர் வீட்டில் அபயாவும், நிக்காவும் இருந்ததை வைத்து அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

மேலும், அந்த உடையில் லாக்கரை உடைக்கும்போது சிதறிய துகள்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. துணியும் கையுமாக சிக்கிக்கொண்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.