UAE Tamil Web

வாட்ஸ்அப்பில் வலை விரித்த கும்பலிடம் சிக்கிய விமானி.! சூடான இரும்பு கம்பியை காட்டி மிரட்டிய திருட்டு கும்பல்

whatsapp

வாட்ஸ்அப் மூலம் விமானி ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து பணத்தை திருடியுள்ளது ஒரு கும்பல். இது தொடர்பான வழக்கை முதல்நிகழ்வு துபாய் நீதிமன்றம் விசாரித்தது.

- Advertisment -

ஜூன் 4 பர் துபாய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரம் பின்வருமாறு, 47 வயதான துருக்கியை சேர்ந்த விமானி ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் பெண் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். தன்னை அமெரிக்காவை சேர்ந்தவள் என்று அந்த பெண் கூறியதாக பாதிக்கப்பட்ட விமானி கூறியுள்ளார்.

சில பல செய்தி பரிமாற்றங்களுக்கு பிறகு ஒரு கப் டீ சாப்பிட விமானியை நேரில் வர அழைப்பு விடுத்துள்ளார் அந்த பெண். இதனை அடுத்து அமெரிக்க பெண்ணை சந்திக்க உற்சாகமாக கிளம்பி சென்ற துருக்கி விமானி, குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்ந்தவுடன் அங்கிருந்த கதவை தட்டியுள்ளார். தட்டப்பட்ட கதவை திறந்துள்ளார் ஒரு பெண். அவரிடம் தான் சந்திக்க வந்த பெண் பற்றி கேட்ட போது, அந்த அமெரிக்க பெண்ணா, அவர் உள்ளே உங்களுக்காக தான் காத்திருக்கிறார் வாருங்கள் என்று உள்ளே அழைத்து கதவை சாத்தியுள்ளார்.

பெண்ணை சந்திக்கும் ஆசையில் வீட்டினுள் நுழைந்த அவரை 4 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 8 பேர் சேர்ந்து சரமாரியாக குத்தியும், அறைந்தும் தாக்கி அவரது மொபைலை பறித்து கொண்டுள்ளனர். பின் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை காட்டி மிரட்டி, அவரது வங்கி அட்டை மற்றும் பின் நம்பரை கேட்டுள்ளார். விமானியும் வேறு வழியின்றி அவர்கள் கேட்டதை கொடுத்துள்ளார்.

அவரது வங்கி அட்டையை பயன்படுத்தி 19,454 திர்ஹம்ஸ் பணத்தை திருடிய பின்னர், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.அவர்கள் பிளாட்டை விட்டு வெளியேறும் போது தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், கும்பல் வெளியேறியதை உணர்ந்த பிறகு உதவிக்காக வெளியே சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் புகார்தாரரான விமானி கூறியுள்ளார். போலீஸாரின் விசாரணைக்கு பின் கும்பலின் நான்கு உறுப்பினர்களை விமானி அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்ட4 பேரும் புகார்தாரரை தங்கள் குடியிருப்பில் கவர்ந்திழுத்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் விமானியிடம் அமெரிக்க பெண்ணை போல பேசியவர் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான 26 வயதான நைஜீரிய நபர் என்பதும் கண்டறியப்பட்டது. எனவே முக்கிய பிரதிவாதியான 26 வயது இளைஞரை தவிர, மற்ற மூவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசத்திற்கு பின் மூவரையும் நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரதிவாதி நவம்பர் 30-ம் தேதி வழங்கப்பட உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.