ஒரு புகைப்படம். அதுவும் 20 வருடத்திற்கு முன்பு எடுத்தது. இதுதான் ஆதாரம். இவ்வளவுதான் கையில் இருக்கும் தகவல். இதனைக்கொண்டு கடந்த 20 வருடங்களாக ஐரோப்பாவை அலறவிட்ட கடத்தல் மன்னனை துபாய் காவல்துறை கைது செய்திருக்கிறது.
மோஃபிட் போச்சிபி (Moufide Bouchibi). பிரான்சில் இந்தப் பெயர் பிரபலம். சொல்லப்போனால் மொத்த ஐரோப்பாவிற்கே. வருடத்திற்கு 50 – 60 டன் போதைப்பொருளை ஐரோப்பாவிற்குள் கொண்டுவரும் அளவிற்கு பெரிய நெட்வொர்க்கை கட்டி எழுப்பியவர் மோஃபிட். இதனால் ஒரு வருடத்திற்கு மோஃபிட்க்கு கிடைக்கும் பணம் 302 மில்லியன்.
அவரது அத்தனை அடையாளங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. பாஸ்போர்ட் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் திட்டமிட்டு மோஃபிட் அழித்திருக்கிறார். போலி ஆவணங்களை உபயோகித்து பயணம், கடத்தல், பணப்பரிவர்த்தனை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த மோஃபிட் அமீரகத்திற்கு வரலாம் என நினைத்ததுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு.
பிரெஞ்ச் காவல்துறைக்கு மோஃபிட் அமீரகம் செல்வது குறித்து தகவல் கிடைக்கவே, அமீரக காவல்துறையின் உதவியை நாடியது பிரான்ஸ். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துபாய் காவல்துறைக்கு பிரெஞ்ச் காவல்துறை சார்பாக அளிக்கப்பட்ட மோஃபிட் பற்றிய ஆதாரம் அவரது பழைய புகைப்படம் மட்டுமே.
மோஃபிட்க்கு எதிராக 2021 ஆம் ஆண்டு ரெட் கார்னர் நோட்டிஸை பிரெஞ்ச் அரசு வெளியிட்டது. இதன்மூலமே துபாய் காவல்துறை தனது தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியிருக்கிறது.
கிட்டத்தட்ட மாய மனிதனைப்போல் மாறியிருந்த மோஃபிட்டைப் பிடிக்க சிறப்புப் படையை அமைத்தது துபாய் காவல்துறை. அவரது இடம், செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை இறுதியில் மோஃபிட்டை சுற்றுவளைத்துப் பிடித்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் தலமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி,” உலகளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் துபாய் காவல்துறை மற்றும் சர்வதேச சட்ட அமலாக்கத்துறை இணைந்து பணியாற்றிதன் மூலம் செய்யப்பட்ட சாதனைகளுள் இது முக்கியமானது” என்றார்.
துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணைத் தளபதி மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி இதுபற்றிப் பேசுகையில்,” இந்த திட்டத்தில் துபாய் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். பிரெஞ்ச் காவல்துறையிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்யும் வரையிலும் தொடர்ந்து தேடுதல் பணியை நாங்கள் மேற்கொண்டோம்” எனக் குறிப்பிட்டார்.
“போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 10 வருடங்களாக பயணித்துவந்த மோஃபிட் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு போர்டாக்ஸ் நீதிமன்றம் அவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும் அங்கிருந்து தப்பிய அவரை கடந்த 10 வருடங்களாக யாராலும் தொட முடியவில்லை” என துபாய் காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் பிரிகேடியர் ஜமால் சலீம் அல் ஜல்லாஃப் தெரிவித்தார்.
துபாய் காவல்துறைக்குப் பாராட்டு
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் துபாய் காவல்துறையின் உறுதிப்பாட்டை பிரெஞ்சு காவல்துறையின் மத்திய இயக்குநர் ஜெரோம் பொனெட் பாராட்டினார். பிரெஞ்சு போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (OFAST) மற்றும் துபாய் காவல்துறை ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.