UAE Tamil Web

அயராத துபாய் போலீஸார்.! திருடப்பட்ட கார் கடல் நடுவே மீட்பு.. வியந்த அமெரிக்க நாட்டவர்

ship

முன்னாள் அமீரக குடியிருப்பாளரின் திருடப்பட்ட காரை துபாய் போலீஸார் கடலின் நடுவில் இருந்து மீட்டுள்ளனர். தனது திருடப்பட்ட காரை கடலின் நடுவிலிருந்து மீட்டு நாட்டிற்கு திரும்ப கொண்டு வந்த துபாய் போலீஸாருக்கு முன்னாள் அமீரக குடியிருப்பாளர் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisment -

காரின் உரிமையாளரான அமெரிக்க நாட்டு குடிமகன் பிரையன் சிட்ல், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் மார்ச் இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

car

.அவரது மார்ச் மாத சம்பளம் மற்றும் பிற செலவுகளை அவர் வேலை பார்த்த நிறுவனம் அவருக்கு அளிக்கவில்லை. பின்னர் வேறு வேலை தேடி மாதம் அலைந்த நிலையில், அப்போதைய சூழலில் வேலை எளிதாக கிடைக்கவில்லை.

வேலை பறி போய் வேறு வேலையும் கிடைக்காததால் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை எதிர் கொண்ட 3 குழந்தைகளின் தந்தையான பிரையன், தனது கடன்கள், வாடகை, பள்ளி கட்டணம் மற்றும் பில்களை செலுத்த பணமில்லாமல் தவித்துள்ளார். இதனை அடுத்து தனது காரை விற்கும் முடிவிற்கு வந்துள்ளார்.

தனது காரை விற்பனைக்கு வைத்த சிறிது நேரத்திலேயே, பிரையனை ஒருவர் தொடர்பு கொண்டார். வேலையின்மை மற்றும் நிதிச்சுமை காரணமாக அழுத்தத்தில் இருந்த பிரையன், தன்னை தொடர்பு கொண்டவரிடம் ஒரு ஐடி, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஒரு செக் வாங்கிய பின் தன் காரை கொடுக்க ஒப்புக்கொண்டார்.

usa

ஒரு வழியாக பேரம் முடிந்த பின்னர் கடந்த ஜூன் 2-ம் தேதி குறிப்பிட்ட நபரிடம் பணத்தை செக் மூலம் பெற்று கொண்டு தன் காரை விற்றுள்ளார் பிரையன். சில நாட்களுக்குப் பிறகு, காரை வாங்கியவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரையன் காரை வாங்கியவரிடம் கேட்டும் உரியவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் , துபாய் போலீசில் புகார் செய்தார்.

பின்னர் அவர் தனது சொந்த நாடான அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு திரும்பி சென்று விட்டார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கார் திருட்டு கும்பல் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டது. பிரையனின் கார் இருக்கும் இடத்தையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

மோசடி செய்யப்பட்டு திருடப்பட்ட பிரையனின் கார் ஒரு கன்டெய்னரில் வைக்கப்பட்டு அந்த கன்டெய்னர் ஒரு படகில் ஏற்றப்பட்டது. கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அந்த படகு கடலின் பாதையில் எங்குள்ளது என்பதை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர்.

இது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரையன், காவல்துறையின் மோசடி தடுப்பு குழுவின் கடினமான விசாரணை இறுதியில் வெற்றியடைந்தது கண்டு வியப்படைந்தேன். அவர்கள் என்ன செய்தார்கள் அல்லது எப்படி செய்தார்கள் என்பது பற்றிய பல விவரங்கள் எனக்கு தெரியவில்லை. என் கார் நாட்டில் இல்லை கடல் மார்க்கத்தில் உள்ளது என்று தெரிந்த பின்னும், துபாய் போலீஸின் அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் கார் மீட்கப்பட்டுள்ளது என்னை வியப்படைய செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

போலீஸ் காரை மீட்டது எப்படி.?

கார் மீட்பு பற்றி தகவல் தெரிவித்த துபாய் காவல்துறையின் மோசடி தடுப்பு குற்றப்பிரிவின் தலைவரான கேப்டன் அகமது சுஹைல் அல் சமாஹி, மோசடி கும்பலின் கைகளுக்கு சென்ற பிரையனின் காரை ஒரு மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டது. பின் அந்த காரை கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு கடத்தி சென்றனர்.

பின் சுங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, கடலின் நடுவில் இருந்து காரை மீட்டது விசாரணைக் குழு. உரிய சட்ட நடைமுறைகளுக்கு பிறகு, புகார்தாரரான பிரையனை அமீரகத்திற்கு அழைத்து அவரிடம் கார் ஒப்படைக்கப்பட்டது என்று கூறினார்.

கடந்த வாரம் அமீரகம் வந்து தனது காரை பெற்று கொண்ட பிரையன் அதை தற்போது உண்மையான வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்று விட்டு அமெரிக்கா திரும்பியுள்ளார். தாயகம் திரும்பும் முன் அமீரகம் பறி பேசிய பிரையன், தாம் மீண்டும் அமீரகத்திற்கு வருவேன் என்று அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு என்ற வகையில் போலீஸ் செய்தது என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது’ என்றார்.