UAE Tamil Web

ஓனரிடமிருந்து ஒட்டகத்தைத் திருடி, உருவத்தை மறைக்கமுடியாமல் சிக்கிக்கொண்ட மேய்ப்பர் – தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்.!

dubai-court

துபாயில் உள்ள பண்ணை ஒன்றில் ஒட்டகங்களை மேய்த்துவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் மீதான ஒட்டக திருட்டு வழக்கில் தீர்ப்பை அறிவித்திருக்கிறது துபாய் நீதிமன்றம்.

திருடப்பட்ட ஒட்டகம்

துபாயின் அல் ஹிபாப் பகுதியில் உள்ள ஒட்டகப் பண்ணையில் பணிபுரிந்துவந்திருக்கிறார் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் இளைஞர். தனது கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டகங்களில் ஒன்றை முதலாளிக்குத் தெரியாமல் கடத்தி அல் மர்மோம் சந்தையில் விற்று காசாக்கியிருக்கிறார்.

10,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள அந்த ஒட்டகத்தைக் காணாமல் தேடிய ஏமிராட்டி முதலாளி, அக்கம்பக்கம் விசாரித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரகஸ்பதி ஒட்டகத்தை சந்தையில் விற்றதை அவர்கள் மூலமாக அறிந்துகொண்ட முதலாளி, உடனடியாக துபாய் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

கடத்திச் சென்றது, திருட்டு ஒட்டகத்திற்கு சந்தையில் பேரம் பேசியது என கையும் களவுமாக சிக்கியிருக்கிறார் இளைஞர். யாருக்கும் தெரியாமல் ஒட்டகத்தைக் கடத்த பிளான் செய்து, இறுதியில் அதன் உருவத்தை மறைக்க முடியாமல் தோற்றும் போயிருக்கிறார்.

3 மாத சிறைத்தண்டனையும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் குற்றவாளிக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

dubai-court
0 Shares
Share via
Copy link