UAE Tamil Web

துபாய்: “பணம் கொடுக்காவிட்டால் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்புவேன்” – 12 வயது சிறுமியை மிரட்டிய சிறுவனை அதிரடியாகக் கைது செய்த காவல்துறை..!

hacker

துபாயில் 12 வயது சிறுமியை ஆன்லைன் மூலமாக மிரட்டிய 15 வயது சிறுவன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். இன்ஸ்டாகிராம் மூலமாக அந்தப் பெண்ணுடன் நண்பரான பிறகு அவருடன் பேசி புகைப்படங்களை வாங்கியிருக்கிறான் பிஞ்சிலேயே பழுத்த இச்சிறுவன்.

- Advertisment -

இவனை நம்பி புகைப்படங்களைப் பகிர்ந்த அப்பெண்ணிற்கு இவனுடைய சுயரூபம் சில நாட்களிலேயே தெரியவந்தது. அந்தப் பெண்ணின் பெயரில் புது இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றினைத் துவக்கி அதில் அந்தப் பெண் தனக்கு அளித்த புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறான் சிறுவன்.

பணம் கொடுத்தால் அப்புகைப்படங்களை நீக்குவதாக சிறுமியை மிரட்டவே, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அச்சிறுமி, தனது மாமாவிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். அவர் உடனடியாக துபாய் காவல்துறையை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

தனது மகளின் பெயரில் துவங்கப்பட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கும்படியும் அதிலுள்ள புகைப்படங்களை அழிக்குமாறும் பெண்ணின் பெற்றோர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து துபாய் காவல்துறை அச்சிறுவனை உடனடியாக கைது செய்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவின் தற்காலிக இயக்குனர் கேப்டன் அப்துல்லா அல் சேஹி ,”ஆன்லைன் மூலமாக மிரட்டலை சந்திப்பவர்கள் உடனடியாக அதனை குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்டவர்கள் துபாய் காவல்துறையின் இணைய வழிக் குற்றங்களுக்கான பிரிவின் (e-crime) மூலமாக புகாரளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.