UAE Tamil Web

இது வயிறா.. சூட்கேசா.. – விமான நிலையத்தில் சிக்கிய நபரின் வயிற்றுக்குள் இருந்த நூற்றுக்கணக்கான கேப்சூல்கள்..!

dubai airport

கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையம் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. ஆசியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கி மெல்ல தனது இருப்பிடத்திற்கு வந்து நின்ற பின்னர், பயணிகள் அதிலிருந்து வெளியேறத் துவங்கினர்.

பயண விசாரணைப் பிரிவுகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தாலும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட ஒருவர் மீது சந்தேகம் வந்தது. உடனடியாக அந்நபர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரது உடமைகளை சல்லடை போட்டு பார்த்த பின்னரும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. வேறு வழியில்லை உடலுக்குள் ஏதாவது ‘சமாச்சாரம்’ இருக்கிறதா? எனப் பார்த்துவிடுவோம் என அதிகாரிகள் முடிவெடுத்ததும் பயணிக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அப்புறம்? வயிற்றுக்குள் 144 ஹெராயின் கேப்சூல்கள் வைத்திருந்தால், வேறென்ன தான் செய்யும். வயிற்றை பரிசோதித்த நொடியே பயணியின் ஜாதகம் தெரிந்துவிட்டது. உடனடியாக அவரது வயிற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,169.9 கிராம் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது.

கையும் களவுமாக இல்லை.. வயிறும் களவுமாக பிடிபட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவே அவர்மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வயிறை, சூட்கேசாகப் பயன்படுத்திய அந்நபர் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

dubai airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap