UAE Tamil Web

அவமானப்படுத்தியதால் குத்தினேன் – நண்பருடன் நேர்ந்த வாக்குவாதத்தால் வந்த விபரீதம்..!

kitchen-knife-

துபாயின் சத்வா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நண்பர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் விளைவாக கொலை நடந்திருக்கிறது. துபாய் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisment -

இதில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட 24 வயது பாகிஸ்தான் இளைஞர் குற்றவாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவில் முடிந்த சண்டை

கொலை செய்யப்பட்டவர் தன்னை அவமானப்படுத்தியதாகவும் அதன் காரணமாக பழங்கள் வெட்டும் கத்தியினால் அவரைக் குத்தியதாகவும் குற்றவாளி தெரிவித்திருக்கிறார்.

காயமடைந்த நபர் சம்பவம் நடந்த அன்று உம் அல் குவைனில் உள்ள தனது அறைக்கு திரும்பி இருக்கிறார். அவரை அழைத்துச்சென்ற வாகன ஓட்டுனர் கூறுகையில்,” சத்வா பகுதியில் ஒருவருடன் சண்டை போட்டதாக அவர் (கொலை செய்யப்பட்டவர்) சொன்னார். மது அருந்தியது போல இருந்தார். அவரது உடம்பில் இரத்தத்தை நான் பார்க்கவில்லை. உம் அல் குவைனில் அவர் கூறிய இடத்தில் அவரை இறக்கிவிட்டேன். அடுத்தநாள் அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது” என்றார்.

இதனிடையே உம் அல் குவைனில் உள்ள கொலைசெய்யப்பட்டவரின் அறைத் தோழரை விசாரித்ததில்,” சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 10 மணிக்கு அவர் (கொலை செய்யப்பட்டவர்) வந்தார். இரவு உணவை வேண்டாம் எனச்சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். அடுத்தநாள் காலையில் நான் வழக்கம்போல வேலைக்குச் சென்றேன். காலை 10 மணிக்கு என்னுடைய அலைபேசிக்கு அழைத்து வலி நிவாரணி இருக்கிறதா? எனக் கேட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் இறந்துவிட்டதாக எனக்கு போன் வந்தது” என்றார்.

பிணக்கூறாய்வு அறிக்கையில் குடலில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அதிகரித்ததே அவரது இறப்பிற்கு காரணமாக சுட்டப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக திட்டமிட்டே இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.