UAE Tamil Web

ஷார்ஜா: கழுத்தை நெரித்து என்னை கொலை செய்ய முயன்றார்.. தந்தை மீது குற்றம்சாட்டிய 11 வயது சிறுவன்.! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

court

ஷார்ஜாவில் 11 வயது சிறுவன் ஒருவர் தனது 48 வயது தந்தை தன்னை கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து கொண்டனர். தம்பதியர் விவாகரத்து பெற்றதிலிருந்து, சிறுவன் தனது 42 வயதான தாயுடன் இருந்தான். ஆனால் சிறுவன் 11 வயதை எட்டிய பின் அவனது தந்தையின் பராமரிப்பிற்கு மாற்றப்பட்டான்.

ஷார்ஜா குற்றவியல் நீதிமன்ற பதிவுகள்படி, ஒரு நாள் சிறுவன் தனது நண்பனுடன் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றுள்ளான். சிறுவனின் தந்தை வீடு திரும்பிய போது, மகனை காணாததால் அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிய மொபைல் போனில் சிறுவனுக்கு கால் செய்துள்ளார்.

அவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட பிறகு ஷாப்பிங் மாலுக்குச் சென்ற சிறுவனின் தந்தை, தனது மகனை தனது ஆடை ஒன்றை அவனது கழுத்தில் சுற்றி தரதரவென காருக்குள் இழுத்து சென்றுள்ளார். தந்தையின் இந்த ஆவேச செயலால் சிறுவன் கழுத்தில் காயங்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.

வீடு திரும்பிய பின் தனது தாயை தொடர்பு கொண்ட சிறுவன், தந்தை தனது கழுத்தை நெரிக்க முயன்றதாக கூறி அழுதுள்ளான். இதனையடுத்து அந்த தாய் தனது மகனை தந்தையின் கஸ்டடியில் இருந்து திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் தந்தை நடந்து கொண்ட விதம் குறித்து காவல்துறையினரிடமும் நீதிமன்றத்திலும் என்ன சொல்ல வேண்டும் என்று தன் மகனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து அந்த தாய் இந்த சம்பவம் பற்றி அதிகாரிகளிக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிறுவனின் தந்தையை தொடர்பு கொண்ட அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அந்த தந்தை மீதான குற்றச்சாட்டை சரிபார்க்க சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தயாரிக்கப்பட்ட போலீஸ் அறிக்கையில் சிறுவனின் கழுத்தில் தந்தையின் ஆவேச நடத்தையால் ஏற்பட்ட அடையாளங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அதன் பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தந்தை தனது மகனைக் கொல்ல விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் தனது மகனை நேசிப்பதாகவும், அவரை ஒழுங்குபடுத்த விரும்புவதாகவும் நீதிபதியிடம் கூறினார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் தான் குற்றவாளி அல்ல என்று மன்றாடினார்.

விசாரணையின் முடிவில் நீதிபதி அந்த தந்தைக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த உத்தரவிட்டார். சிறுவன் மீண்டும் தாயின் கஸ்டடிக்கு மாற்றப்பட்டான்.

court
0 Shares
Share via
Copy link