UAE Tamil Web

ஒரு வருடமாக தேடப்பட்டுவந்த பெண் சடலமாக மீட்பு – அபுதாபியில் நிகழ்ந்த சோகம்..!

Mary-Anne-Daynolo

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதிதான் மேரி அன்னா தாய்நொலோ (Mary Anne Daynolo) வை அவரது பெற்றோர் கடைசியாகப் பார்த்தது. அபுதாபியின் சதாயாட் ஐஸ்லேண்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவந்த மேரி பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்தவர்.

- Advertisment -

30 வயதான மேரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் காணாமல் போன தினத்தில் இருந்து அபுதாபியில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் அபுதாபி காவல்துறை பல்வேறு தேடுதல் வேட்டையை நடத்திவந்தன.

இந்நிலையில் மேரியின் உடல் கடந்த ஜனவரி 19, 2021 ஆம் தேதி அபுதாபி காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலைக்குற்றத்தை செய்த மேரியின் சக பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜனவரி 30 ஆம் தேதி மேரியின் உடல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

மேரியின் மரணத்திற்கு நீதி கிடைக்க பிலிப்பைன்ஸ் தூதரகம் என்றென்றும் கடுமையாகப் போராடும் எனவும் தூதரக வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அமீரகத்திற்கான பிலிப்பைன்ஸ் தூதர் திரு. ஜாய்சீலின் M. குவிண்டானா தெரிவித்தார்.

மேலும், மேரியை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தூதரகம் தெரிவித்துள்ளது. மேரியின் பெற்றோர் பேஸ்புக் மூலம் தங்களது மகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு புதிய பக்கம் ஒன்றினை நடத்திவந்தனர்.

என்றாவது ஒருநாள் அவர் வீடு திரும்புவாள் என எதிர்பார்த்த மேரியின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடையே இச்செய்தி இடியாக இறங்கியிருக்கிறது.