UAE Tamil Web

“லாக்கரையே காணவில்லை” – விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பியவருக்கு ஷாக் கொடுத்த கும்பல்..!

dubai-court

துபாயின் அல் குசைஸ் பகுதியில் உள்ள வில்லா ஒன்றில் வசித்துவரும் 38 வயதான எமிராட்டி ஆண் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்திற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அப்போது சீனாவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வில்லாவிற்குள் நுழைந்து 5,80,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தங்கம் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களைத் திருடிச்சென்றிருக்கிறது.

- Advertisment -

ஜனவரி 3 ஆம் தேதி தனது மாமியாரிடமிருந்து வில்லா உரிமையாளருக்கு போன்கால் வந்திருக்கிறது. வில்லாவிற்கு வேலைக்குச் சென்ற பணிப்பெண் பொருட்கள் களவு போயிருப்பதாக தெரிவித்ததை அவரிடம் சொல்லியிருக்கிறார் மாமியார். உடனடியாக நாடு திரும்பிய அவர் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் லாக்கரைக் காணவில்லை எனவும் சில முக்கிய பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக வில்லாவின் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

நோட்டம் விட்ட கும்பல்

வில்லாவிலிருந்து எடுக்கப்பட்ட லாக்கரை இந்தக் கும்பல் பாலைவனத்திற்கு தூக்கிச்சென்று உடைத்து அதிலுள்ள பொருட்களை அபகரித்திருக்கிறது. துபாயின் இண்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பதுங்கியிருந்த இந்த கும்பலை துபாய் காவல்துறை அதிரடியாக கைதுசெய்திருக்கிறது.

வாடகைக்கு வாகனங்களை எடுத்து, அதன்மூலம் வில்லாக்களை நோட்டம் விட்டதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.

மீட்கப்பட்ட நகைகள்

இந்த கும்பலிடம் இருந்து 34 தங்க வளையல்கள், 53 தங்கம் மற்றும் வைர மோதிரங்கள், 81 தங்க காதணிகள், 18 தங்க நெக்லஸ்கள் மற்றும் 55 சொகுசு கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அனைவரும் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.