30.3 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

நோய்வாய்ப்பட்டவரை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் இளைஞர் செய்த கொடூரம்.! மரண தண்டனை வழங்க கோரிக்கை..

court

துபாயில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்ட 29 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் கோரியுள்ளது. தனது வயதான முதலாளியை கொலை செய்த காரணத்திற்காக, அவருக்கு இந்த அதிகபட்ச தண்டனைய வழங்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ பதிவுகளின்படி, “கடந்த ஜூன் மாதம் கொலையுண்ட எமிராட்டி மனிதரை, அவரது மனைவி குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதிவாதியுடன் அல் முரகாபத் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். 2 மணி நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்த போது, கார்டியனான பிரதிவாதி நுழைவாயிலில் அவரை சந்தித்து, அவரது கணவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன் கணவர் திடீர் உடல்நல கோளாறால் கீழே விழுந்துவிட்டார் போல என நினைத்து அருகில் சென்று பார்த்துள்ளார்.குளிர்சாதன பெட்டியின் அருகே தரையில் விழுந்து கிடந்த அவரது முகம் நீலமாகவும், வீக்கமாகவும் காணப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்த அவரது மனைவி கார்டியனிடம் ஆம்புலன்ஸ் அல்லது போலீசை அழைக்க சொல்லியுள்ளார். ஆனால் அவரோ அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இறுதியில் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த மருத்துவர்கள் எமிராட்டி மனிதர் இறந்து விட்டதாக அவரது மனைவியிடம் கூறியுள்ளனர்.

எனினும் இறந்தவரின் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய துணியை கவனித்த மருத்துவர்கள் உடனடியாக துபாய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து கார்டியன் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை தேடி கண்டுபிடித்த போலீஸார் கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

தான் கொலை செய்தவரின் மகன் தனது தந்தையை கவனித்து கொள்ள மாதத்திற்கு 2,000 திர்ஹம்ஸ் சம்பளம் பேசி அழைத்து வந்தார். ஆனால் முதலாளியோ இரு மாதங்களுக்கு தலா 800 திர்ஹம்ஸ் மட்டுமே கொடுத்தார். மேலும் அவ்வப்போது தன்னை குச்சியால் அடித்து கொடுமை மற்றும் அவமானப்படுத்தியதோடு மாத ஊதியத்தை 600 திர்ஹம்ஸாக குறைத்து விட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதிவாதி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன பிரச்சனை?

சம்பவம் நடந்த நாளில் முதலாளியான எமிராட்டி மனிதர் டீ போட்டு தர சொன்னார். ஆனால் டீ தர சற்று தாமதமானதால் கடுமையாக பேசிய முதலாளி ஒரு கட்டத்தில் என்னை அடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை கீழே தரையில் தள்ளி அவரது மார்பின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பெட் ஷீட் மூலம் கழுத்தை நெரித்து கொன்றேன். பின் சுமார் ஒரு மணி நேரம் அவரது உடலின் அருகிலேயே அமர்ந்திருந்தேன் என பிரதிவாதி கூறியதாக போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இரக்கமில்லாமல் சிரித்த இளைஞன்..

இந்த சம்பவத்திற்கு முன் எனது தந்தை உறவினர் ஒருவரிடம் பாகிஸ்தான் பிரதிவாதி ஒரு நாள் தன்னை கொன்றுவிடுவார் என்று அச்சம் தெரிவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவரின் மகன் துபாய் போலீசாரிடம் கூறியுள்ளார். தனது தந்தை பலவீனமானவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ள கொலையுண்டவரின் மகன், சம்பவத்தை கேள்விப்பட்டு நான் வீட்டிற்கு விரைந்து தந்தைக்கு உதவ ஏதாவது செய்யச் சொன்னேன். ஆனால் அவரோ சிரித்துக் கொண்டே என் தந்தை நலமாக இருப்பதாக கூறினார்.

அவரது செயல் மற்றும் என் தந்தையின் கழுத்தில் இருந்த துணி இவற்றை வைத்து பார்த்த போது என் தந்தை கொலை செய்யப்பட்டதை உணர்ந்தேன். பாகிஸ்தான் பிரதிவாதி தன்னை அடிக்கடி துஷ்பிரயோகம் செய்வதாக தந்தை பலமுறை கூறியுள்ளார். மேலும் பிரதிவாதி எனது தந்தையை கழுத்தில் பிடித்து தள்ளுவார் என் சகோதரரும் என்னிடம் சொன்னார் என்று கொலையானவரின் 22 வயது மகன் சாட்சி கூறியுள்ளார்.

இதனை அடுத்து திட்டமிட்டு கொலை குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி, குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதிவாதிக்கு மரண தண்டனை வழங்க துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் நீதிமன்றத்தை கேட்டு கொண்டுள்ளது. எனினும் இவ்வழக்கு விசாரணை நவம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 error: Alert: Content is protected !!