22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

தவறான சிகிச்சையால் “புத்திர பாக்கியத்தை” இழந்த நபர் – முதுகுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

Hospital in UAE

தனது கால்கள் செயலிழக்கக் காரணமாக இருந்த அறுவை சிகிச்சையை தனக்கு மேற்கொண்ட மருத்துவமனையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தொடுத்த வழக்கு அபுதாபி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு கால்கள் செயலிழந்துள்ள நிலையில், அவரது இனப்பெருக்க மண்டலமும் செயலிழப்பை சந்தித்ததற்குக் காரணம் மருத்துவனையின் அலட்சியமே என நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு 1.5 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கவும் மருத்துவமனைக்கு கட்டளையிட்டிருக்கிறது.

முதுகுவலி

தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர் அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு முதுகெலும்பில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. அவரது முதுகுத் தண்டின் ஒரு கண்ணியை (vertebra) மருத்துவர்கள் அகற்றியிருக்கிறார்கள். அதுதான் அந்நபரின் வலிக்குக் காரணம் என அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு வலி தொடர்ந்திருக்கிறது. ஆகவே அவர் மருத்துவமனைக்கு மீண்டும் செல்கையில் பாதிக்கப்பட்ட நபருக்கு வேறுவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன்பின்னர் அவரது கால்கள் முழுவதுமாக செயலிழந்திருக்கிறது. அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாததால் தற்போது சக்கர நாற்காலி தான் அவரது வாழ்க்கை என்றாகிப்போனது.

இதனையடுத்து அம்மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். மருத்துவமனையில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

அலட்சியம்

மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் பாதிக்கப்பட்ட நபருக்கு இத்தகையை சிக்கல் வந்ததா? என்பதைத் தீர்மானிக்க நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ கமிட்டி,” இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் மேற்கொண்ட தவறான சிகிச்சையின் காரணமாகவே பாதிக்கப்பட்டவரின் கால்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்பு செயலிழந்து போயிருப்பதாக” உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது சிறுநீர் வெளியேறுவதைக் கூட பாதிக்கப்பட்டவரால் உணர இயலவில்லை என கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த நீதிமன்றம் மருத்துவமனையின் அலட்சியமே அவரது இந்த பாதிப்பிற்குக் காரணம் என தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

கீழமை நீதிமன்றத்தில் மருத்துவமனைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், மேல்முறையீட்டை ரத்து செய்து கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தியிருக்கிறது மேல்முறையீட்டு நீதிமன்றம்.



error: Alert: Content is protected !!