UAE Tamil Web

துபாய் : இந்திய தொழிலதிபரை ஏமாற்றி 19 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை கொள்ளையடித்த கும்பல் – பிடிபட்ட அனைவரும் இந்தியர் என போலீஸ் தகவல்..!

dubai-court

துபாய்: நைஃப் பகுதியில் உள்ள இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான அலுவலகம் ஒன்றிற்கு திடீரென 8 பேர் கொண்ட கும்பல் சென்றிருக்கிறது. அதில் மூன்று பேர் காவல்துறை சீருடை அணிந்திருந்திருக்கிறார்கள்.

- Advertisment -

இந்த போலி காவல்துறை நபர்கள் மற்றும் மேலும் இரண்டு பேர் அந்த அலுவலகத்தின் வெளியே நின்று காவல் காக்க, மீதி நபர்கள் உள்ளே சென்று, இந்தியரிடம் வணிக உரிமத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.

இவர்களை அரசு அதிகாரிகள் என நினைத்த இந்தியர், உரிமத்தை தனது பங்குதாரரிடம் புதுப்பிப்பதற்காக வழங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். கும்பல் உடனேயே அவரது போனைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், அல் ரஷீதியா காவல் நிலையத்திற்கு வரும்படி இந்திய தொழிலதிபரை அழைத்திருக்கிறார்கள்.

காரில் ஏறும்படி பணித்த கும்பல், இண்டர்நேஷனல் சிட்டி பகுதியில் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி தொழிலதிபரைக் கீழே இறங்கச் சொல்லியிருக்கிறது. அவரது போனை அவரிடமே ஒப்படைத்த கும்பல், தங்களுக்கு உற்சாக பானம் வாங்கிவரும்படி தெரிவித்திருக்கிறது.

கடைக்கு உள்ளே சென்று, பானத்துடன் திரும்பியவர் காரைக் காணாததால் சந்தேகமுற்று தனது பங்குதாரருக்கு போன் செய்து நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறார். அவர் உடனடியாக அலுவலகத்திற்கு சென்று பார்க்கும்போது பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

காவல்துறை விசாரணையில் அலுவலகத்தில் இருந்த 19 லட்சம் திர்ஹம்ஸ் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. உடனடியாக குற்றவாளிகளைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

பிடிபட்டவரில் மூன்று பேர் மீது, காவல்துறை அதிகாரியாக நடித்ததாகவும் மீதிப் பேர் மீது கொள்ளையில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.