UAE Tamil Web

துபாய்: கொலை செய்துவிட்டு விமானம் ஏறிய கும்பல் – கடைசி நொடியில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Ajman_

அஜ்மானின் அல் ரவ்தா பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் வசித்துவந்த ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் (32) சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

- Advertisment -

இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த அன்று, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்த காவல்துறை, அங்கே காணாமல் போயிருந்ததாக சொல்லப்பட்ட நபர் உயிரிழந்திருந்தார். அவரது உடம்பில் கத்திக் குத்துகள் இருந்தன.

உடனடியாக குற்றவியல் விசாரணைத் துறை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்துள்ளனர். விசாரணையில் இறந்தவர் முதலீட்டாளர் தான் என உறுதிசெய்யப்பட்டது.

துளிர்த்த சந்தேகம்

விசாரணைக்காக கொலை செய்யப்பட்டவரின் அருகில் உள்ள வீட்டில் வசித்துவந்த நால்வரை அணுக, அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற இருப்பதாகவும், விமான நிலையத்திற்கு சென்றுவிட்டதாகவும் காவல்துறையினருக்குத் தெரியவந்திருக்கிறது.

உடனடியாக விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தது காவல்துறை. விமானத்தில் ஏற அனைத்து வழிமுறைகளையும் முடித்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். எஞ்சிய ஒருவர் ஷார்ஜாவில் வைத்து ஷார்ஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்தோம்…

குற்றவாளிகள் கைதானதை அடுத்து அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகள்,” நாங்கள் அந்த வீட்டிற்குள் செல்லும்போது உரிமையாளர் அங்கில்லை. வீட்டில் இருந்த 1 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகையில் உரிமையாளர் எங்களைப் பார்த்துவிட்டார். அதனால் நங்கள் ஆயுதம் கொண்டு அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்தோம்” என்றனர்.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் காவல்துறையின் குற்றவியல் பிரிவின் தலைமை இயக்குனரான லெப்டினன்ட் கர்னல் அகமது சயீத் அல் நுவைமி, ” தகவல் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் இந்த வழக்கை முடித்த காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள். பொதுமக்கள் தங்களைச் சுற்றி சந்தேகிக்கும்படியான செயல்கள் நடந்தால் எவ்வித தயக்கமுமின்றி எங்களை அணுகலாம்” என்றார்.