UAE Tamil Web

கோவிட்-19: நாடு திரும்ப முடியாமல் தவித்தவரின் 9 உயர் ரக சொகுசு கார்களை குறி வைத்த திருட்டு கும்பல்.!! எத்தனை கார்களை தூக்கியது, எவ்வளவுக்கு விற்றது.?

car

துபாய் வில்லாவில் இருந்து 9 சொகுசு கார்களை திருட திட்டமிட்ட கும்பல் ஒன்று துபாய் போலீஸால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

இது குறித்து துபாய் போலீஸார் தெரிவித்துள்ள தகவலில், கார்களின் உரிமையாளர் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள தனது வில்லாவில் மொத்தம் 9 உயர் ரக சொகுசு கார்களை வைத்திருந்தார். அவர் தற்போது அமீரகத்தில் இல்லை, நாட்டிற்கு வெளியே உள்ளார்.

மேலும் அவர் நாட்டில் இல்லாத காரணத்தால் தனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்ட தனது வில்லாவையும், கார்களையும் அவ்வப்போது நேரில் சென்று சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டிருந்தார். இடையில் கோவிட்-19 தொற்று வந்து விட்டதால், கார் உரிமையாளரின் நண்பரால் தவறாமல் வில்லாவிற்கு சென்று பார்வையிட முடியாமல் போனது.

இந்த கால கட்டம் கார்களை திருடிய 6 ஆசிய நபர்கள் அடங்கிய கும்பலுக்கு சாதகமாகி போனது. திருட்டு கும்பல் தங்கள் நகர்வை சரியாக திட்டமிட்டு குறிப்பிட்ட வில்லாவிலிருந்த 9 உயர் ரக கார்களில், 3 கார்களை திருடிச் சென்றனர்.

குற்றவியல் விசாரணை விவகாரங்களுக்கான உதவித் தளபதி மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி சம்பவம் பற்றி கூறுகையில், சொகுசு கார்களை திருடுவதற்கு திருட்டு கும்பலுக்கு, வில்லாவின் காம்பவுண்ட் பாதுகாப்புக் காவலர் உடந்தையாக இருந்துள்ளார். இதனிடையே கார் உரிமையாளரின் நண்பர் திடீரெனெ ஒரு நாள் வில்லாவிற்கு சென்று காரை சரி பார்த்தபோது 3 கார்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உரிமையாளர் நாட்டிற்கு வெளியே இருந்த நிலையில், கார்கள் திருட்டு பற்றி துபாய் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த கும்பலை அடையாளம் காண நாங்கள் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி, வில்லா காம்பவுண்டின் பாதுகாப்புக் காவலரை தீர விசாரித்தோம். அதில் லஞ்சம் பெற்று கொண்டு அந்த வில்லாவுக்குள் கொள்ளையர்களை வழிநடத்தியது, கொள்ளைக்கு உதவி செய்தது மற்றும் கொள்ளையர்கள் கார்களை வெளியே எடுத்து செல்ல உதவியது எல்லாம் தாம் தான் என்று ஒப்பு கொண்டார்.

துபாய் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஜமால் அல் ஜல்லாஃப் கூறுகையில், போலீஸ் சிறப்பு குழுக்கள் குற்றவியல் தரவு பகுப்பாய்வு மையத்தின் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் கண்டன. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபருக்கு அமீரகத்தில் வாகன வழிமுறைகளை தெரிந்து விற்பனை செய்வதில் அறிவு இருந்தது.

இந்த கும்பல் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நடைமுறையில் உள்ள விமானக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டிற்கு திரும்ப முடியாத நபர்களின் கார்களை குறி வைத்துள்ளது. மேலும் இக்கும்பல் மூன்று கார்களையும் அவற்றின் சிறப்பு தட்டு எண்களையும் கொண்ட போலி ஆவணங்களை உருவாக்கியது. மோசடி செயல்கள் மூலம் திருடிய 3 கார்களையும் சுமார் 3 மில்லியன் திர்ஹம்ஸிற்கு அந்த கும்பல் விற்றுள்ளது.

துபாய் காவல்துறையின் குற்றவியல் ஆராய்ச்சி விவகாரங்களுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் கர்னல் அடெல் அல் ஜோகர் கூறுகையில், இதே கும்பல் வேறு ஒரு சம்பவத்தில் கோவிட் -19 காரணமாக துபாய்க்கு திரும்ப முடியாத உரிமையாளர் விட்டுச் சென்ற காரையும் திருடியுள்ளது. காரின் ஆவணங்களை மோசடி செய்து அதன் உண்மையான விலையை விட குறைவாக விற்றுள்ளதை கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வில்லா உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியே செல்லும்போது, தங்களின் ‘ஹோம்ஸ் செக்யூரிட்டி’ சேவையின் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு துபாய் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.