UAE Tamil Web

ஐபோனை வாங்கிவிட்டு கத்தியைக் காட்டிய நபர் – காட்டிக்கொடுத்த பேஸ்புக்..!

dubai-court

கத்தி முனையில் ஐபோனை தூக்கிச்சென்ற குற்றத்திற்காக அரபு ஆண் ஒருவர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பொது வழக்குத்துறை ஆவணங்களின்படி இந்த சம்பவம் இந்த வருட நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது.

- Advertisment -

பேஸ்புக் மூலமாக

கத்தியைக் காட்டிய ஆசாமி ஒருநாள் பேஸ்புக்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஐபோன் விற்பனைக்கு இருப்பதாக ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கிறார். விலை 1,700 திர்ஹம்ஸ். உடனடியாக அதில் குறிப்பிட்டுள்ள போன் நம்பருக்கு அழைத்து ஹோர் அல் அன்ஸ் பகுதிக்கு போனை எடுத்துவரும்படியும் தான் வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்தநாள் காலம் தவறாமல் ஐபோனை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்த நபரும் வந்திருக்கிறார். அட்டைப்பெட்டியை வாங்கி எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னர் தனக்கு மொபைல் போனை பிடித்திருக்கிறது என அரபு ஆண் சொல்லியிருக்கிறார். முக மலர்ச்சியுடன் பணம் தருமாறு விளம்பரதாரர் கேட்க, இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து நீட்டியிருக்கிறார் அரபு ஆள்.

“களவாணிப்பயகிட்ட மாட்டிக்கிட்டோமே” என விளம்பரம் செய்தவர் தன்னையே நொந்துகொண்டு இருந்தநேரத்தில் கத்தியைத் தூக்கிக்கொண்டு போனுடன் ஆள் ஓடி மறைத்திருக்கிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த நபர், காவல்துறையை நாடியிருக்கிறார். முழு விபரத்தையும் கேட்டறிந்த காவல்துறை பேஸ்புக் உரையாடலை காண்பிக்குமாறு வலியுறுத்த போன் விற்கச் சென்றவரும் இசைந்திருக்கிறார். அதில், கத்தியைக் காட்டிய உத்தமரின் புகைப்படம் தெள்ளத்தெளிவாக ப்ரோஃபைல் பிக்சராக இருந்திருக்கிறது.

அதனைக்கொண்டு சில மணிநேரங்களில் ஐபோனைத் தூக்கிக்கொண்டு ஓடிய நபர் காவல்துறையிடம் அகப்பட்டுக்கொண்டார். அவரிடமிருந்து போன் மற்றும் கத்தி ஆகியவை மீட்கப்பட்டிருக்கிறது.