fbpx
26.8 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

ரமலான் மாதத்தில் பொதுவெளியில் காப்பி குடித்த நபர் – கேள்விகேட்ட காவலதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தியவருக்கு தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..!

dubai-court

துபாய் நீதிமன்றத்தில் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் காப்பி அருந்திய நபர், காவல்துறை அதிகாரியைத் தாக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 42 வயது எகிப்து நாட்டைச் சேர்ந்தவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிவடைந்தவுடன் அவர் உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல்

கடந்த மே மாத மத்தியில், பாம் ஜூமேய்ராவில் உள்ள உணவகம் ஒன்றில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களிடம் ஒருவர் அத்துமீறுவதாக காவல்நிலையத்திற்கு பொதுமக்களால் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறை அதிகாரி (27) குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரிடம் சென்று பேசியிருக்கிறார்.

தனது குடியிருப்புப் பகுதிக்கு வெளியே காப்பித் தம்ளருடன் வந்த அந்நபரை காவல் நிலையத்திற்கு வருமாறு இரு காவல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தனது குடியிருப்புக்குச் செல்ல எத்தனித்தவரை இளம் காவல் அதிகாரி தடுக்கவே, எகிப்து நாட்டவர் தாக்கத் துவங்கியுள்ளார்.

காவலதிகாரியின் தலையில் தாக்கி, பின்னர் குரல்வளையை நெரித்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

காவல் அதிகாரியை தாக்கியது மற்றும் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் காப்பி அருந்தியது ஆகிய குற்றத்திற்காக அவர் மீது துபாய் பொது வழக்குத்துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!