UAE Tamil Web

வைரத்தைத் தொலைத்ததாக புகாரளித்த பெண்: 4 மணிநேரத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை..!

Dubai Police

தொலைந்துபோன வைரத்தை 4 மணிநேரத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை.

வளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், புர் துபாய் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருக்கிறார். அதில், தான் தங்கியிருந்த ஹோட்டலில் தனது வைரக் கல்லினை தொலைத்துவிட்டதாகவும், ஹோட்டலின் எந்தப் பகுதியில் இருந்தபோது அது தொலைந்தது எனத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக புர் துபாய் காவல் நிலையத்தில் இருந்து அந்தப் பெண்மணி குறிப்பிட்ட ஹோட்டலுக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கையில், ஐரோப்பாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஹோட்டலின் உள்ளே தரையிலிருந்து எதையோ எடுத்து தனது பாக்கெட்டிற்குள் வைப்பதை காவல்துறையினர் கண்டிருக்கின்றனர்.

அவரது அறைக்குச் சென்று இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்க, தனக்கு இதுகுறித்து ஏதும் தெரியாது என அப்பயணி தெரிவித்துவிட்டார். இருப்பினும், காவல்துறை அவரது அறையை சோதனையிட்டபோது, சிறிய பர்ஸ் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனுள் அந்த வைரம் இருப்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

பர்ஸ் கீழே கிடந்ததாகவும், அதன் உரிமையாளர் யாரென்று தெரியாததால் தானே வைத்துக்கொண்டதாகவும் அந்தப் பயணி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.

பின்னர், புகாரளித்த பெண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரிடம் வைரமானது ஒப்படைக்கப்பட்டது. புகாரளித்த 4 மணிநேரத்தில் வைரத்தை மீட்டுக்கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார் அந்தப் பெண்மணி.

விலையுயர்ந்த பொருட்கள், பணம், பர்ஸ் முதலியவற்றை கீழே இருந்து எடுப்பவர்கள் அதனை காவல்நிலையத்தில் கொடுப்பதன்மூலம் சட்ட சிக்கலை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். காவல்நிலையத்திற்கு நேரில் வர முடியாதவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dubai Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap