காரைப் பார்க்கிங் செய்வதையொட்டி எழுந்த சண்டையில் ஏமிராட்டி ஆணை கடுமையாகத் தாக்கிய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கும்பல் மீதான வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை அளித்திருக்கிறது துபாய் நீதிமன்றம்.
பார்க்கிங் சிக்கல்
நைஃப் பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதி ஒன்றில் தனது காரை நிறுத்துவதற்காக ஏமிராட்டி ஆண் (37) தனது சகோதரருடன் காத்திருந்திருக்கிறார். அதே இடத்தில் காரை நிறுத்த 4 பேர்கொண்ட கும்பல் ஒன்றும் முயற்சித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பிற்குச் சென்றிருக்கிறது.
நான்கு பேரில் ஒருவர் ஏமிராட்டி ஆணை கல்லால் அடித்து வீழ்த்தியிருக்கிறார். மற்றொருவர் தீயணைப்பான் கருவிகொண்டு தாக்க, இன்னொருவர் ஸ்க்ரூ டிரைவரால் மார்பில் குத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர் காயம் காரணமாக மயக்கமடையவே, அவரது சகோதரர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை, பாதிக்கப்பட்டவரின் மார்பில் ஸ்க்ரூ டிரைவர் இருப்பதை கண்டிருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நிலை தேறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவரது உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உடலானது 15 சதவீத ஊனமடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 பேர் கைதான நிலையில் மற்றொரு ஆசாமி இன்னும் காவல்துறையால் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் குற்றவாளிகள் நாடுகடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.