fbpx
UAE Tamil Web

பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..!

massage centre

அமீரகத்தில் வசித்துவரும் அந்த ஜோர்டானிய நபருக்கு வயது 42. அன்னார் ஒருமுறை பேஸ்புக்கில் உலக அரசியலை கவனித்துக்கொண்டிருந்த சமயத்தில் மசாஜ் நிறுவனம் ஒன்றின் பக்கம் கண்ணில் தட்டுப்பட்டிருக்கிறது.

முகப்புப்படத்தில் அழகான பெண்ணின் புகைப்படம். உலக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு பெண்ணிடம் மெசேஜ் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ஜோர்டானிய ஆசாமி. பெயர், ஊர் என ஆரம்பித்து எப்போது? எங்கே? என்பது வரையில் பேச்சுவார்த்தை நீண்டிருக்கிறது. இந்த சந்திப்பு மசாஜ் குறித்து என்பதை நினைவில் கொள்க.

அந்தப் பெண் சொன்ன தேதியில், சொன்ன இடத்தில், சொன்ன நேரத்திற்கு டான் என்று இவரும் சென்றிருக்கிறார். பல கனவுகளுடன் காலிங்பெல்லை அடிக்க கறுப்பினப் பெண் ஒருவர் கதவைத் திறந்திருக்கிறார். திகைப்பு தொண்டைக்குள் உருண்டாலும், செல்போனில் இருந்த புகைப்படத்தைக்காட்டி இந்தப் பெண் எங்கே? எனக் கேட்டிருக்கிறார்.

அருகில் இருந்த அறையை அந்தப்பெண் கைகாட்ட ஆர்வத்துடன் உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே 3 நைஜீரிய இளைஞர்கள். துண்டை எடுத்து வாயில் வைத்துக்கட்டி, அவரிடம் இருந்த பர்ஸ், செல்போன் உள்ளிட்ட பொருட்களை உருவியிருக்கிறார்கள்.

அவரது கிரெடிட் கார்டு எண்ணைக் கேட்டறிந்து அதில் இருந்து 50,000 திர்ஹம்ஸ் பணத்தை அபேஸ் செய்திருக்கிறது இந்தக் குழு. நடந்ததை வெளியே சொன்னால் தலை தப்பாது என மிரட்டல் விடுத்திருக்கிறது கும்பல்.

அவசரமாக வெளியே வந்த நபர் நேரே அல் ரெஃபா காவல்நிலையத்திற்குச் சென்று தன்னுடைய பேஸ்புக் தேடல் முதல் வாயில் கட்டப்பட்ட துண்டு வரையில் அனைத்தையும் சொல்லி புகாரளித்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் 6 பேர்கொண்ட இந்த திருட்டுக் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

நைஜீரியாவைச் சேர்ந்த இந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மீது வழிப்பறி மற்றும் கொலைமிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதியட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த ஆறு நபர்களும் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

இவ்வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என துபாய் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.