UAE Tamil Web

“ஆபரேஷன் ஃப்ளாஷ் பவர்”.. போதைப்பொருள் கும்பலை அதிரடியாக சுற்றிவளைத்த ஷார்ஜா போலீஸ்..

sharjah

போதைப்பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் 9 பேர் தங்களது “ஃப்ளாஷ் பவர்” என்னும் அதிரடி ஆபரேஷன் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா போலீஸார் அறிவித்துள்ளனர்.

- Advertisment -

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஷார்ஜா காவல்துறை, ரகசிய தகவல் கிடைத்த 12 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், 15 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஒரு மில்லியன் செனெக்ஸ் என்ற போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி விரிவான தகவல்களை கூறிய போதைப்பொருள் அமலாக்கத் துறை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் மஜித் அல் அசெம், போதை பொருட்களை கையாளும் ஒரு பெரிய கும்பலைப் பற்றி எங்கள் துறைக்கு ஒரு ரகசிய குறிப்பு கிடைத்தது. அந்த கும்பல் 24 மணி நேரத்திற்குள் வேறு ஒரு குழுவுக்கு விநியோகிக்கும் நோக்கில் பெரிய அளவிலான போதை மாத்திரைகள் கையில் வைத்திருப்பது தெரிய வந்தது.

சமூக விரோத கும்பல் உறுப்பினர்களைக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார் அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு,சுற்றி வளைக்கும் திட்டத்தை அமைத்தனர். ஆபரேஷனின் போது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த சிறப்பு குழு 12 மணி நேரத்திற்குள் அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கைது செய்தது. சந்தேக நபர்கள் தங்கள் தகவல் தொடர்புகளில் போலி அடையாளங்களை பயன்படுத்தினாலும், விழிப்புடன் இருந்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தியதால் அவர்களை கைது செய்ய முடிந்தது.

சந்தேக நபர்கள் விசாரித்த போது, அவர்கள் போதை மாத்திரைகளை பிரமோட் செய்வதும், வெவ்வேறு எமிரேட்ஸில் அவற்றை சேமிப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து சந்தேக நபர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார். போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க நாட்டின் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுக்கு இடையில் நிலவும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பாராட்டிற்குரியது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எந்த முயற்சியையும் ஷார்ஜா காவல்துறை விடாது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுவோர் குறித்து 8004654 என்ற எண்ணிலோ அல்லது de@shjpolice.gov.ae என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு அவர் சமூக உறுப்பினர்களை கேட்டு கொண்டார்.