UAE Tamil Web

கப்பலில் வந்த காய்கறி கன்டெய்னரில் அமீரகத்திற்கு கடத்திவரப்பட்ட 123 கிலோ போதைப்பொருட்கள்.!

arrest

அமீரகத்திற்குள் 123 கிலோ போதைப்பொருட்களை புழக்கத்தில் விட முயன்ற சர்வதேச கும்பலின் சதியை துபாய் காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

- Advertisment -

ஆசிய நாடு ஒன்றிலிருந்து வந்த குளிரூட்டப்பட்ட கப்பல் கொள்கலனின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘தி ஃப்ரிட்ஜ்’(The Fridge) என்று பெயரிடப்பட்ட காவல்துறையினரின் அதிரடி ஆபரேஷனின் விளைவாக, சர்வதேச கிரிமினல் கும்பலின் 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருட்களை டெலிவரி செய்வதற்காக கொள்கலனின் அடிப்பகுதியில் இருந்து அவற்றை எடுத்து கொண்டிருந்த போது, கிரிமினல் குமபலை சேர்ந்தவர்களை சுற்றிவளைத்து காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆசிய நாட்டைத் தளமாகக் கொண்ட தங்கள் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றவாளிகள் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புத் துறை இயக்குநர் பிரிகேடியர் முகமது தானி ஹரேப், போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்ட கொள்கலனை கண்காணிப்பில் வைக்க ஷார்ஜா காவல்துறை மற்றும் ஷார்ஜா சுங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

வர்தகருக்கு தெரியமலே நடந்த கடத்தல்..

ஆசிய நாட்டிலிருந்து வரும் கப்பலில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்த கன்டெய்னரில் மறைத்து வைத்து அமீரகத்திற்கு கடத்தி வரப்பட்ட 123 கிலோ போதை மருந்துகளை எதிர்பார்த்து இங்கு ஒரு கும்பல் காத்திருக்கும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர் சரக்கை பெற துறைமுகத்திற்குச் சென்றார். ஆனால் கடத்தல் கும்பல் தனது கன்டெய்னரில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை அந்த வணிகர் அறிந்திருக்கவில்லை.

காலி கன்டெயினரை கண்காணித்த அதிகாரிகள்..

பின்னர் தனது ஃபிரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு போய் கன்டெயினருடன் சந்தையில் இறக்கினார். அந்த கன்டெய்னரில் இருந்த பழங்கள், காய்கறிகளை இறக்கிய பிறகு, அவற்றை மணல் நிரம்பிய முற்றத்தில் வைத்தார் வணிகர். இதற்கிடையே ரகசிய போதைப்பொருள் தடுப்பு குழு அந்த காலியான கன்டெய்னரை நெருக்கமாக கண்காணித்து வந்தனர்.

இரவில் வந்த மூவர்..

ஒரு நாள் இரவு 3 நபர்கள் கன்டெய்னரை தேடி அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த குறிப்பிட்ட கன்டெய்னரின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் தங்கள் தலைவரால் போதைப்பொருட்களை கன்டெய்னரிலிருந்து இறக்குவதற்கும், அடுத்த உத்தரவு வரும் வரை அவற்றை மறைப்பதற்கும் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்டதையும், 12,000 திர்ஹம்ஸ் பணத்திற்கு ஈடாக இந்த தவறை செய்ய முடிவெடுத்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

துபாய் போலீஸ் கால் சென்டர் 901 என்ற எண்ணை தொடர்புகொள்வதன் மூலம் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்களையும் குறிப்பாக போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் குறித்து புகாரளிக்க பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்