UAE Tamil Web

துபாயில் அதிர்ச்சி சம்பவம்: வெறும் 35 கிலோ எடையில் இருந்த பணிப்பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்து கொன்ற ஸ்பான்சர்.!

dubai

துபாயில் பணிப்பெண் ஒருவரை அவரது ஸ்பான்சர்(ஆண்) சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

இந்த குற்ற சம்பவம் பற்றி துபாய் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜமால் அல் ஜல்லாஃப் தகவல் தெரிவித்துள்ளார். அரபு ஸ்பான்சர் ஒருவர் தனது வீட்டில் வேலை பார்த்த ஆசிய நாட்டை சேர்ந்த பணிப்பெண்ணை துபாயிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

பணிப்பெண் கீழே வழுக்கி விழுந்து விட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார் அந்த ஸ்பான்சர். ஆனால் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை கண்டறிந்தனர். ஸ்பான்சர் மேல் எழுந்த சந்தேகத்தால் சம்பவம் பற்றி, துபாய் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போது பணிப்பெண் இறந்ததற்கன காரணம் தனக்குத் தெரியாது மறுத்துள்ளார்.

ஆனால் வெறும் 35 கிலோ உடல் எடை மட்டுமே கொண்டிருந்த இறந்த பணிப்பெண்ணின் உடலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், மார்பில் ஏற்பட்ட பலத்த காயத்தால் தான் அவரின் உயிர் பிரிந்ததாகவும், மருத்துவமனை கொண்டு வருவதற்கு பல மணி நேரங்கள் முன்பே அவர் இறந்து விட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் அதிர வைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பணிப்பெண்ணின் உடல் மிக பலவீனமாக இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

பின்னர் போலீசார் ஸ்பான்சரிடமும், அவரது மனைவியிடமும் மேற்கண்ட தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தினர். இறுதியாக தனது கணவர் பணிப்பெண்ணை அடித்ததாக ஸ்பான்சரின் மனைவி ஒப்புக்கொண்டார். தான் தாக்கிய ஒரு நாள் கழித்து தான் பணிப்பெண் இறந்து விட்டதை ஸ்பான்சர் உணர்ந்துள்ளார்.

வீட்டு வேலைகளை செய்ய திணறிய பணிப்பெண்..

தொற்று காலத்திற்கு முன் குறிப்பிட்ட ஆசிய நாட்டு பணிப்பெண்ணை ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தியுள்ளார் ஸ்பான்சர். ஆனால் பணிப்பெண் உடல்நிலை சரியில்லாதவர் என்பது பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அவரால் தனது கடமைகளைச் செய்ய முடியாது என்பதை ஸ்பான்சர் தெரிந்து கொண்டார். எனினும் 6 மாதங்கள் வரை அவரை வைத்து சமாளித்த ஸ்பான்சர், அந்த பணிப்பெண்ணை திருப்பியனுப்ப ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் முயற்சித்துள்ளார். ஆனால் தொற்று காரணமாக பணிப்பெண்ணிற்கு தற்போது உரிய மாற்று இடத்தை தயார் செய்து தர இயலாது என்று அலுவலகம் ஸ்பான்சரிடம் கூறியது.

மனநலம் பாதிக்கபட்ட ஸ்பான்சர்..

இதற்கிடையில் ஸ்பான்சர் அவரது வேலையிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனால் எப்போதும் வீட்டிலேயே இருந்த ஸ்பான்சர், பணிப்பெண்ணுடன் அடிக்கடி சண்டையிட்டு கொண்டே இருந்துள்ளார். வேலை இழந்த காரணத்தால் தனது கணவரின் மனநிலை மோசமாகிவிட்டதாக ஸ்பான்சரின் மனைவி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஒருகட்டத்தில் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட பணிப்பெண்ணை அடித்து, சிகெரெட்டால் அவரது உடலில் சூடு வைத்து, கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்துள்ளார் ஸ்பான்சர் என்று போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கு பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதற்காக ஆட்சேர்ப்பு அலுவலகத்திற்கு அவர் செலுத்திய 20,000 திர்ஹம்ஸ் கட்டணத்தை திரும்ப பெற முடியாமல் போனதால் ஸ்பான்சர் விரக்தியடைந்து பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பணியாளர்களை கருணை மற்றும் நேர்மையுடன் நடத்த வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் மூலமே தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் காவல் அதிகாரிகள் ஸ்பான்சர்களை அறிவுறுத்தியுள்ளனர்.