துபாய்: அல் பார்ஷா காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகஸ்டு 18 ஆம் தேதி வழக்கம்போல தங்களது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது. திடீரென வேகமெடுத்த கார், தங்களிடம் அளிக்கப்பட்ட முகவரிக்குச் சென்று நின்றது.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த வில்லாவின் அருகே ஒரு பெண் அழுதபடி காவல்துறை வாகனத்தை நோக்கி ஓடிவந்தார். வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளிவர சிரமப்பட, காவல்துறை அவரை சமாதானப்படுத்தி நடந்தவற்றை கூறும்படி கேட்டனர்.
திறந்த கதவு
உகாண்டாவைச் சேர்ந்த 30 வயதுள்ள அந்தப் பெண்மணி தான் வேலைசெய்யும் வீட்டில் எப்போதும்போல வேலைகளை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்து தூங்கியிருக்கிறார். வேலைப்பளுவின் காரணமாக அசந்து தூங்கியவருக்கு ஏதோ நெருடலாகத் தோன்ற கண் விழித்துப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் உரிமையாளரான 36 வயது பாகிஸ்தான் நபர் தன்மீது நிர்வாணமாக இருப்பதும், தனது பாலியல் இச்சைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டிருப்பதும் அவருடைய மூளைக்குள் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே கூச்சல் போட்டிருக்கிறார்.
உடனடியாக இடத்தைவிட்டு வெளியேறும்படி பெண்மணி தெரிவித்திருக்கிறார். “உன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே இப்படி நடந்துகொண்டேன்” என அந்த பாகிஸ்தான் நபர் அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார். பெண்ணின் அறைக் கதவில் தாழ்பாள் இல்லாததால் உரிமையாளர் எளிதாக உள்ளே சென்றிருக்கிறார்.
அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு வெளியே ஓடிவந்த பெண், அல் பார்ஷா காவல்துறைக்கு தகவல் அளித்தார். வில்லாவிற்குள் அந்தப் பெண்ணுடன் நுழைந்த காவல்துறை, அங்கிருந்த பாகிஸ்தான் நபரைக் கைது செய்தது.
நீதிமன்ற விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்நபர், இச்செயலில் அந்தப் பெண்ணிற்கும் விருப்பம் இருந்ததாக தனக்குத் தோன்றியது எனத் தெரிவித்தார்.
“அந்த அறையில் புதிய தாழ்பாளைப் பொருத்தச் சென்றேன். அப்போது அவர் (பாதிக்கப்பட்ட பெண்) குப்புறப் படுத்திருந்தார். அவருக்கும் இதில் உடன்பாடு இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் என்னைத் தள்ளிவிட்டு, கூச்சலிட ஆரம்பித்தார்” என நீதிமன்ற விசாரணையில் பாகிஸ்தான் நபர் தெரிவித்தார்.