fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

துப்பாக்கி முனையில் தொழிலாளியைக் கடத்திச்சென்ற இரு இளைஞர்கள் – தீர்ப்பை அறிவித்தது நீதிமன்றம்…!

gun

ஸ்டன் கன் எனப்படும் மின்சாரத் துப்பாக்கியைக் காட்டி தொழிலாளியை கடத்திச்சென்று பணம் பறித்த இரு இளைஞர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பை அறிவித்தது துபாய் நீதிமன்றம்.

சிபிஐ அதிகாரிகள்

ஜூலை 18 ஆம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் மளிகைக் கடையை விட்டு வெளியே வந்திருக்கிறார். திடீரென அவர் முன்னால் ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர் தன்னை குற்றவியல் விசாரணைப்பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, தொழிலாளியை காரில் ஏறும்படி பணித்திருக்கிறார்.

சட்ட விரோதமாக சிகரெட்களை விற்ற குற்றத்திற்காக உங்களைக் கைது செய்கிறோம் என காரில் இருந்து இறங்கிய நபர் சொல்ல, முதுகுத்தண்டில் ஜில்லிட்டது தொழிலாளருக்கு. வேறு வழியில்லாமல் காரில் ஏறிக்கொள்ள காரில் அவரது அருகே இருந்தவரிடம் ஸ்டன் கன் எனப்படும் மின்சாரத் துப்பாக்கி இருந்ததை தொழிலாளி பார்த்திருக்கிறார்.

அவரிடமிருந்து மொபைல் போன், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பர்ஸ் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும், கார் கொஞ்ச நேரத்தில் நிறுத்தப்பட்டு தான் அல்கூஸ் பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகவும் தொழிலாளி தெரிவித்தார்.

எமிரேட்ஸ் ஐடி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை திருப்பிக்கொடுத்த திருடர்கள், பர்சில் இருந்த 3000 திர்ஹம்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டனர் என காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் தொழிலாளி. போலீசாரின் தேடுதல் வேட்டையில் இரண்டு குற்றவாளிகளும் சிக்கினர்.

20 வயதே நிரம்பிய மாணவர்களான இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரித்ததில், இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சம்பவம் நடந்தபோது மேலும் சில தொழிலாளர்களையும் இப்படி கடத்தியதாகவும் மற்ற எவரிடமும் பணம் இல்லை எனவும் குற்றவாளிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இளைஞர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி 925 திர்ஹம்ஸ் விலையுடையது எனவும், தொழிலாளியின் பொருட்கள் திருடர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்திருந்தார்.

வெளிவந்த தீர்ப்பு

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு இளைஞர்களுக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. முன்னதாக பொது வழக்குத்துறை குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் அதிகபட்ச அபராதம் விதிக்குமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!