UAE Tamil Web

குழந்தைகளின் கண் முன்னே அவர்களது தாயை கொடூரமாக தாக்கிய அரபு பெண்.! அபராதத்தை குறைக்க மறுத்த நீதிமன்றம்..

court

அமீரகத்தில் வசிக்கும் அரபு பெண் ஒருவருக்கு, மற்றொரு பெண்ணை அவரது குழந்தைகள் கண் முன்னே தாக்கியதோடு மட்டுமின்றி, அவரின் இடது கண் பார்வையில் பிரச்சனையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 45,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

- Advertisment -

இது தொடர்பான வழக்கை விசாரித்த அபுதாபி சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றம், முதல் நிகழ்வு நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் அடித்ததால் ஏற்பட்ட பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கு ஈடாக, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க தண்டனை பெற்ற பெண்ணுக்கு உத்தரவிட்டது,

அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்களின் படி, பாதிக்கப்பட்ட பெண் கைகளில் வெட்டுகள், இடது கண்ணுக்கு மேலே, கழுத்து மற்றும் நெற்றி மற்றும் முதுகு என உடல் முழுவதும் பல காயங்களுடன் அபுதாபியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்துள்ளார். மேலும் தனது குழந்தைகள் முன்னிலையில் பிரதிவாதியால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறினார். தாக்குதலுக்கு காரணம் குறிப்பிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது, ஆனால் அந்த பெண் இடது கண்ணில் வலி இருப்பதாக தொடர்ந்து கூறினார். தகராறின் போது பிரதிவாதியான அரபு பெண் ஒரு பொருளை கொண்டு தாக்குதல் நடத்தியதில் அவருக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. கண்ணின் நிலை பின்னர் மேம்பட்டாலும், பார்வை தெரிவுநிலை (visibility) பாதிக்கப்பட்டது.

பின் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் மருத்துவ அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தாக்குதலின் விளைவாக இடது கண்ணில்10% இயலாமை ஏற்பட்டுள்ளதாகவும், இதுஅவருக்கு உளவியல் வலியையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அரபு பெண்ணுக்கு குற்றவியல் நீதிமன்றம் தகுந்த அபராதம் விதித்தது.

பின்னர் நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏற்பட்ட உடல், தார்மீக மற்றும் பொருள் சேதங்களுக்கு இழப்பீடாக 450,000 திர்ஹம்ஸ் கோரி ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த முதல் நிகழ்வு சிவில் நீதிமன்றம் 45,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க அரபு பெண்ணுக்கு உத்தரவிட்டது.

எனினும் இந்த தீர்ப்பில் திருப்தி ஏற்படாத இரு தரப்பும் மேல்முறையீட்டிற்கு சென்றன. மருத்துவரின் அறிக்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், புகார்தாரர் ஏற்கனவே கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்ணுக்கு மேலே உள்ள காயங்கள் சிகிச்சைக்கு பின் 21 நாட்களில் குணமாகிவிட்டதாகவும் பிரதிவாதி தனது முறையீட்டில் தெரிவித்தார். மேலும் இழப்பீட்டுத் தொகையை 10,000 திர்ஹம்ஸாக குறைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் இருவரது முறையீடுகளையும் நிராகரித்து, முதல் நிகழ்வு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.