UAE Tamil Web

உன் வயசு என்ன? கார் சைஸ் என்ன? – அதிவேகமாய் காரை ஓட்டி 3 பேரின் சோலியை முடிக்க இருந்த சிறுவன் கைது..!

car

லைசன்சும் இல்லை. அதை எடுக்க போதுமான வயதும் இல்லை. ஆனால் காரோட்டும் ஆர்வம் மட்டும் அதிகமிருந்த அந்த சிறுவன் தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு ராஸ் அல் கைமா சாலையில் சீறிப் பறந்திருக்கிறார்.

மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த காரைக் கண்டு திகைத்த 3 பேர் எந்தப் பக்கம் செல்வது என யோசித்து முடிவெடுப்பதற்குள் கார் அவர்களை நெருங்கிவிட்டது. பிரேக்கை அழுத்தினாலும் அவர்களை தூக்கி எறிந்தபின்னரே வாகனம் நின்றிருக்கிறது.

இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் மற்ற இரண்டுபேருக்கும் மிதமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமா காவல்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு இயக்குனர் கேப்டன் அப்துல் ரஹ்மான் அஹ்மத் அல் சேஹி,” விபத்துக் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்றார்.

இதனையடுத்து காரை ஓட்டிவந்த 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கவேண்டும் எனவும் லைசன்ஸ் பெற்ற பிறகே அவர்களை காரை ஓட்ட பெற்றோர் அனுமதிக்கவேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.