UAE Tamil Web

அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள தாயகத்திற்குச் செல்ல அனுமதிக்காததால் இந்தியர் நிகழ்த்திய வெறிச்செயல்..!

Knife_generic_

துபாயில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தன்னை தாயகத்திற்கு அனுப்பாத காரணத்தினால் சக ஊழியரை கத்தியால் குத்திய வழக்கு நேற்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisment -

என்ன நடந்தது?

அந்த கட்டுமான நிறுவனம் விடுப்பில் செல்லும் 22 ஊழியர்களை தயாராக இருக்கும்படி தெரிவிக்குமாறு 25 வயதான பாதிக்கப்பட்ட இந்தியரிடம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் 38 வயதான இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி தன்னுடைய தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தான் உடனடியாக இந்தியா திரும்பவேண்டும் எனவும் அந்த ஊழியரிடம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்தநாள் அவருடைய தாய் இறந்துபோனதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தன்னுடைய பெயர் நாடு திரும்புவோரின் பட்டியலில் இடம்பெறாதது ஏன்? என குற்றவாளி 25 வயது இந்தியரிடம் முறையிட்டிருக்கிறார். நிர்வாகம் எடுத்த முடிவு இது என பாதிக்கப்பட்டவர் தெரிவித்திருக்கிறார்.

வாக்குவாதம் கைமீறிப் போகவே, அந்த இடத்திலிருந்து குற்றவாளி தனது அறைக்குச் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து கையில் கத்தியுடன் திரும்பிவந்தவர் தன்னை மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் 11 முறை குத்தியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்திருக்கிறார்.

குற்றவாளி சம்பவம் நடந்த வேளையில் மது அருந்தியிருந்ததாக பாதிக்கப்பட்டவர் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக காயமுற்ற இந்தியர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். துபாய் காவல்துறை குற்றவாளியைக் கைது செய்திருக்கிறது.

கொலை செய்ய முயற்சித்ததாக குற்றவாளி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 10, 2021 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.