அபுதாபியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில், இளைஞர் ஒருவரை “தூய்மையற்ற வெக்கம் கெட்டவனே” எனத் திட்டிய அரபு பெண்ணின் மீதான வழக்கு இன்று அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன உளைச்சல்
அபுதாபியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் நின்றுகொண்டிருந்த தன்னை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் எவ்வித அவசியமும் இல்லாமல் “தூய்மையற்ற வெக்கம் கெட்டவனே” எனத் திட்டியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளைஞருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1000 திர்ஹம்ஸ் பணத்தை இழப்பீடாக வழங்கும்படி அரபு பெண்ணிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1,00,000 திர்ஹம்ஸ் இழப்பீடு
இதனையடுத்து தனக்கு ஏற்பட்ட அவமானம் கருதியும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் தனக்கு 1 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்திரவிடக்கோரி அந்தப் பெண் மீதான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார் இளைஞர்.
வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அரபு பெண்ணை குற்றவாளியாக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 15,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கும்படியும் பெண்ணிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ட்விஸ்ட்
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த அரபு பெண்ணின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், சம்பவம் நிகழ்ந்த அன்று இளைஞர் (பாதிக்கப்பட்டவர்) அரபு பெண்ணுடைய மகளைச் சுற்றி சுற்றி வந்ததாகத் தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகளிடம் போன் நம்பர் பெற முயற்சித்தார் எனவும் அப்பெண் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனாலும் அந்தப் பெண்ணின் மேல்முறையீட்டை ரத்து செய்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்.