நாள்பட்ட மருத்துவ நிலைமைகளை கொண்ட அபுதாபி பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி முதல் மீண்டும் வளாகக் கற்றலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைவரும் பாதுகாப்பாக பள்ளிக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (Adek) சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளது. தனியார் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாள்பட்ட மருத்துவ நிலைமைகளைக் கொண்ட மாணவர்கள் நேரடி வகுப்பறை கற்றல் முறைக்கு திரும்பி வரலாம் என்று Adek தெரிவித்துள்ளது.

ஆனால் நிபந்தனைகளை விதித்துள்ளது. அது என்னவெனில் நாள்பட்ட மருத்துவ நிலைமைகளை கொண்ட மாணவர்கள், மருத்துவ ரீதியாக பள்ளி வகுப்புகளில் நேரில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று தங்கள் மருத்துவரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்று வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை ஒப்புக் கொண்டு, பெற்றோர் ஒப்புதல் படிவத்தையும் மாணவர்கள் பெற்று வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Adek-ன் இந்த முடிவுகள் மிக உயர்ந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கான நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.

முன்னதாக கடந்த மாதம், 2021 ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் புதிய கல்வியாண்டில் அபுதாபியில் உள்ள அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் வகுப்பறை கல்விக்குத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று Adek அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.