UAE Tamil Web

அகதி மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்காக டிஜிட்டல் பள்ளியை துவக்கி வைத்த ஷேக் முகமது.! புதிய கற்றல் அனுபவத்தை தர திட்டம்..

schol

அரபு பிராந்தியத்தில் ஆன்லைன் கல்வியை அதிகரிக்கும் மற்றும் உலகளவில் ஒரு புதிய கற்றல் அனுபவத்தை அறிமுகப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பள்ளி ஒன்று துபாயில் துவக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பள்ளி, குறிப்பாக அகதிகள் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷேக் முகமது, இந்த டிஜிட்டல் பள்ளியானது மாணவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஸ்மார்ட் கல்வியை வழங்கும் என்றும், நடப்பாண்டில் 20,000 மாணவர்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிஜிட்டல் பள்ளி மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலகெங்கிலும் கல்வி கற்க முடியாமல் பின்தங்கிய சூழலில் உள்ள ஒரு மில்லியன் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதே எங்கள் இலக்கு என்றும் ஷேக் முகமது அந்த டீவீட்டில் கூறியுள்ளார். புதிய டிஜிட்டல் பள்ளி அதன் பாடத்திட்டத்திற்கான ஒப்புதலை பெற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

அரபு உலகில் தற்போது கல்வி இடைவெளி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஷேக் முகமது, மோதல்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மில்லியன் கணக்கான மாணவர்கள் பல ஆண்டு கல்வியை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த சவால்களை எதிர்கொள்ள யாரும் செயல்படவில்லை என்றால், இளம் தலைமுறைகள் அறியாமை மற்றும் தீவிரவாதத்தால் வழிநடத்தப்படும் அபாயம் உள்ளது. இது மாதிரியான முயற்சிகள் மூலம் அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் தேசங்களை அறிவின் ஒளியுடன் வழி நடத்துவார்கள் என்று ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார்.