துபாயில் இருந்து மதுரை வந்த இளைஞர்; COVID-19 சிறப்பு முகாமில் இருந்து தப்பி ஓட்டம்..!

COVID-19 isolation case escaped from special camp
COVID-19 isolation case escaped from special camp

துபாயில் இருந்து தமிழகம் வந்த இளைஞர் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாமில் இருந்து தப்பித்து பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையை சேர்த்த விஜய் (22) என்ற அந்த இளைஞர், மதுரை கொரோனா தடுப்பு சிறப்பு முகாமில் இருந்து தப்பித்து சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். அதை தொடர்ந்து, அவரை அவனியாபுரம் போலீஸார் பிடித்து மீண்டும் சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர்.

துபாயில் இருந்து கடந்த மார்ச் 23ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்த விஜய், சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

அதன் பின்னர், இவர் மதுரை சின்ன உடைப்புப் பகுதியிலுள்ள கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில் (மார்ச் 24) மாலை நேரத்தில் முகாமில் இருந்து திடீரென அவர் மாயமானது தெரியவந்தது. இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் முத்துவேல் என்பவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பேரில், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்ராஜ் தலைமையில் போலீஸார் பல்வேறு இடங்களில் தேடினர். பிறகு அவரது செல்போன் எண்ணை வைத்துப் பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில், சிவகங்கை அருகில் (மார்ச் 25) ஒரு பெண்ணுடன் வைத்து அவரைப் கையும்களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர்ப் பகுதியில் காதலித்த பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, அவரைப் பார்க்கச் சென்றதும், நேற்று முன்தினமே அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று விஜய் திருமணம் செய்ததும் தெரியவந்தது.

அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீஸார் விஜய் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் விஜய்யை அவனியாபுரம் போலீஸார் சின்ன உடைப்பு கொரோனா சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், விஜய் திருமணம் செய்த சிறுமி சிவகங்கை அருகே அவரது வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

Loading...