37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

UAE : மாத ஊதியங்கள் வழங்கப்படுவதில்லையா? – எங்கே, எப்படி புகார் அளிப்பது?

Salary Issues

உலகளவில் தொழில்துறை மற்றும் புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சிகளுக்கு ஏற்ற நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும். இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வேலைவாய்ப்பு தேடி அமீரகத்திற்கு வருகின்றனர். மிகப்பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட அமீரகம் சிறப்பான ஊதிய வழங்கு விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது.

அமீரக பணியாளர்களுக்கு அவர்களுடைய நிறுவனங்கள்/முதலாளிகள் ஊதியங்கள் வழங்குவதற்கான விதிமுறைகளை அமீரக அரசு பல காலமாக திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அமீரக அரசின் இந்த ஊதிய வழங்கு விதிமுறைகளைப்பற்றி விளக்கவே இந்த பதிவு.

ஒவ்வொரு முதலாளியும் தங்களது பணியாளர்களுக்கு குறித்த தேதியில் ஊதியத்தினை வழங்கவேண்டும். தனியார் துறைகள் ஊதிய பாதுகாப்பு அமைப்பின் (Wages Protection System) மூலம் தங்களது பணியாளர்களுக்கு குறித்த தேதியில் ஊதியத்தை வழங்கி, தங்களுக்கான தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தங்களை காத்துக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.

ஊதியம் வழங்கப்படாத போது அல்லது ஊதியம் வழங்க தாமதமாகும் போது எப்படி புகார் அளிப்பது?

தங்களுக்கான ஊதியம் வழங்கப்படாத மற்றும் தாமதாமாகும் நிலையில் பணியாளர்கள் மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தை (MoHRE) கட்டணமில்லா இலவச எண் 80060 அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

இதுவே MoHRE இணையதளத்தின் வாயிலாக புகார் அளிக்க விரும்புவோர்; இந்த லிங்கை கிளிக் செய்து அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

முதலாளிகள் எப்போது ஊதியம் வழங்கிட வேண்டும்?

அமீரகத்தில் ஆண்டிற்கான அல்லது மாத அடிப்படையிலான ஊதியத்தை, ஒவ்வொரு மாதமும் குறித்த தேதியில் அல்லது நிறுவனங்கள் தாங்கள் வரையறுத்திருக்கும் ஒவ்வொரு மாதத்திற்குமான ஊதிய காலக்கெடு முடிந்து 10 நாட்களுக்கு மிகாமல் பணியாளர்களுக்கு வழங்கிடவேண்டும். ஒப்பந்தத்தில் ஊதிய காலக்கெடு பற்றி குறிப்பிடப்படவில்லை எனில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பணியாளர்களுக்கு முதலாளிகளால் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஊதியமானது அமீரக பணத்தில்(திர்ஹம்ஸ்) மட்டுமே வழங்கப்படவேண்டும். அதேபோல ஊதியத்தினை வேலை நாட்களில் மட்டுமே பணியாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம்

அமீரக தொழிலாளர் சட்டத்தில் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு எனக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பணியாளர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தின் 63 வது பிரிவு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கான  குறியீடானது, பொதுவாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு அமைச்சரவையின் ஆணை மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறது.

அடிப்படை ஊதியம் மற்றும் மொத்த சம்பளம்

அமீரக தொழிலாளர் சட்டத்தில் எத்தனை சதவிகிதத்தின் படி அடிப்படை ஊதியம் (Basic Salary) வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இதனை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் குறித்து நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யலாம்.

எவ்வாறு ஊதியம் செலுத்தப்பட வேண்டும்?

2016 ஊதிய பாதுகாப்பு குறித்த அமைச்சக ஆணை எண். 739 ன் அடிப்படையில், MoHRE அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து முதலாளிகளும் தங்களை கட்டாயம் ‘ஊதிய பாதுகாப்புத் திட்டத்தில்’ இணைத்துக் கொள்ள வேண்டும். ஊதிய பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தினை முதலாளிகள் வழங்கிடவேண்டும்.

ஊதிய பாதுகாப்பு திட்டத்தின்படி ஊதியத்தை பணியாளர்களின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது அமீரக மத்திய வங்கியால் சேவை வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கோ முதலாளிகள் அனுப்ப வேண்டும்.

ஊதிய பாதுகாப்புத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளாத நிறுவனங்களின் தலைவர்களை தொடர்புகொள்ளவோ அல்லது பணப் பரிமாற்றத்தையோ MoHRE அமைச்சகம் மேற்கொள்ளாது.

ஊதிய பாதுகாப்புத் திட்டத்தை தவிர்த்தால் எவ்வளவு அபராதம்?

2017 அமைச்சக தீர்மான எண் 15 ன் படி ஊதிய பாதுகாப்புத் திட்டத்தில் மோசடி செய்பவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் அபராதம் விதிக்கப்படும்.

  • ஊதிய பாதுகாப்புத் திட்டத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு அல்லது ஏற்கனவே உள்ள சிக்கலை சமாளிக்கும் காரணமாக தவறான தரவுகளை உள்ளீடு செய்பவர்களுக்கு – ஒரு பணியாளருக்கு 5000 திர்ஹம்ஸ் என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை அதிகமான பணியாளர்கள் இருந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
  • ஊதிய பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் சரியான தேதியில் ஊதியம் வழங்காவிடில் – ஒரு பணியாளருக்கு 1000 திர்ஹம்ஸ் என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும்.
  • தங்களது ஊதியத்தை பெற்றுக்கொண்டோம் என போலியான ஊதிய சீட்டில் கையெழுத்திட பணியாளரை வற்புறுத்தினால் – ஒரு பணியாளருக்கு 5000 திர்ஹம்ஸ் என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும்.
 தாமதமாகும் அல்லது வழங்கப்படாத ஊதியங்கள்
  • ஊதியம் வழங்கப்பட வேண்டிய தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் (ஊதிய காலக்கெடு நிறைவடைந்ததிற்கு பிறகான நாட்களில் ஊதியம் வழங்குதல்) ஊதியமானது வழங்கப்படவில்லையெனில், முதலாளி தாமதமாக ஊதியம் வழங்குவதாக கருதப்படுவார்.
  • ஊதியம் வழங்கவேண்டிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் முதலாளி ஊதியம் கொடுக்க மறுப்பவராக கருதப்படுவார்.
ஊதியம் தர தவறும் நிறுவனங்களுக்கான தண்டனைகள்

100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு…

100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட நிறுவனங்கள் குறித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் ஊதியம் தர மறுத்தால் கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்படும்.

  • ஊதியம் வழங்க கால தாமதமான 16 ஆம் நாளிலிருந்து வேலைக்கான அனுமதி (Work Permits) வழங்கப்படாது.
  • ஊதியம் வழங்கும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தங்களது பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தாமதப்படுத்தும் நிறுவனங்கள், தண்டனை நடவடிக்கைகளுக்காக நீதித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
  • ஒருவேளை அதே முதலாளியால் பல்வேறு நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டால், அவர் நிர்வகிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முதலாளி/முதலாளிகள் தங்களது புதிய நிறுவனத்தை பதிவு செய்ய இயலாது.
  • ஊழியர்களின் பெயரில் முதலாளியால் வங்கியில் வரவு வைக்கப்பட்ட உத்திரவாத பணங்கள் (Employees’ bank guarantees) அனைத்தும் எடுக்கப்பட்டு அதன்மூலம் கடன்கள்  ஈடுகட்டப்படும்.
  • நிறுவனம் மூன்றாம் தர நிறுவனமாக தரம் குறைக்கப்படும்.
  • பணியாளர்கள் மற்ற நிறுவனங்களுக்கு இடம்பெயர அனுமதியளிக்கப்படுவர்.

ஒருவேளை 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து, அந்நிறுவனத்தில் 60 நாட்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லையெனில், ஊதியம் பெறாத பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 5000 திர்ஹம்ஸ் என்ற விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும். பலருக்கும் ஊதியம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும்.

100 க்கும் குறைவான பணியாளர்களைக்கொண்ட நிறுவனங்கள்

ஊதிய தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில், கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • வேலை அனுமதி ரத்து செய்யப்படும்.
  • அபராதம் விதிக்கப்படும்.
  • நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும்.

ஒரு வருடத்திற்குள் பலமுறை இதே தவறை செய்யும் நிறுவனங்களுக்கு, 100 க்கும் அதிகமான ஊழியர்களைக்கொண்ட நிறுவனத்திற்கு வழங்கப்படும் அதே அபராதத்தினை இந்நிறுவனத்திற்கும் MoHRE விதிக்கும்.

Source: UAE Government Portal

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!