22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

தனியார் துறையில் சேர பெண்களை ஊக்குவிக்கும் புதிய சட்டம் அமீரகத்தில் நாளை முதல் அமல்..

newlaw

பாலின சமத்துவத்தில் உலகிற்கே முன்னோடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமீரகம், தற்போது தனியார் துறையில் பணிபுரியும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள புதிய சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும், புதிய ஃபெடரல் சட்டம் நாளை(செப்டம்பர் 25) முதல் அமீரகத்தில் நடைமுறைக்கு வருகிறது. அமீரகத்தின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் 2020-ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் எண் 6, கடந்த ஆகஸ்ட் 25 -ம் தேதி வெளியிடப்பட்டது . அதில் “பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரே பதவியில் இருந்தால் அல்லது அவர்கள் ஒரே மாதிரியான வேலைகளை செய்தால் இருவருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ள இந்த புதிய சட்டம், தொழிலாளர் உறவுகள் குறித்த 1980-ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க ஃபெடரல் சட்டத்தின் 32-வது பிரிவை மாற்றுகிறது. திறமையான பெண்கள் தனியார் துறையில் தயக்கமின்றி வேலைக்கு சேருவதை இந்த புதிய சட்டம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் 2019-ம் ஆண்டிற்கான பாலின சமத்துவம் தொடர்பான தரவரிசை பட்டியலில் அமீரகம் 26-வது இடத்தில் உள்ளது. அரபு உலகில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஷேக் முகமது பின் ரஷீத், பாலின இருப்பு கவுன்சிலை(Gender Balance Council) நிறுவிய போது, பாலின சமத்துவம் தொடர்பான பட்டியலில் 2021-க்குள் உலகின் முதல் 25 நாடுகளில் அமீரகம் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



error: Alert: Content is protected !!