துபாயில் கொரோனாவிற்குப் பிறகு தினசரி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய மக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் துபாய் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசிய RTA வின் நிர்வாக இயக்குனரும், நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவருமான மட்டார் அல் தயேர்,”இந்த அளவு எண்ணிக்கையில் மக்கள் துபாய் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியிருப்பது, அவர்கள் போக்குவரத்து அமைப்புகளில் கடைபிடிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்றார்.
செப்டம்பர் 9 துபாய் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய நபர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
- துபாய் மெட்ரோ : 458,060 பேர்
(ரெட் லைன்: 311,090, கிரீன் லைன்: 146,970)
- டிராம்: 15,932
- பொதுப் பேருந்துகள்: 254,420
- மரைன் போக்குவரத்து: 21,502
- ஷேர் செய்யும் இ-வாகனங்கள்: 66,590
- டாக்ஸி: 516,409
அமீரகத்தின் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களது வழிகாட்டலுக்கு இணங்க, துபாயை உலகின் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகளைக்கொண்ட நகரமாக மாற்ற தீவிரமாக உழைத்துவருவதாக தயேர் குறிப்பிட்டார்.