UAE Tamil Web

கொரோனாவால் துபாயில் மரணமடைந்த தமிழக தாய் – நிர்கதியான 10 மாத குழந்தையை பத்திரமாக தாயகத்திற்கு அனுப்பிவைத்த தமிழர்..!

VELAVAN

தமிழகத்திலிருந்து வேலைதேடிவந்த இடத்தில் தாய் மரணமடைய, ஆதரவற்று நின்ற 10 மாத குழந்தையை பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார் அமீரக வாழ் தமிழரான எஸ்.எஸ்.மீரான்.

வேலவன் – பாரதி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டாவது மகனான தேவேஷ் உடன் பாரதி துபாய்க்கு வேலைதேடி வந்துள்ளார். பிறந்து 10 மாதமே ஆன தேவேஷை தோளிலும் மனது முழுவதும் கனவுடனும் அவர் அமீரகம் வந்திறங்கியிருக்கிறார் பாரதி.

7 வயதான மூத்த மகன் தமிழகத்தில் தனது தந்தை வேலவனுடன் இருந்திருக்கிறான். இந்நிலையில் பாரதிக்கு கொரோனா கண்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட, குழந்தையை அவரது நண்பர் கவனித்துக்கொண்டிருக்கிறார். நாட்கள் செல்லச்செல்ல பாரதியின் நிலைமை கவலைக்கிடமானது.

இறுதியாக மே 29 ஆம் தேதி, பாரதி மரணமடைந்தார். இந்தியா – அமீரகம் இடையேயான பயணத் தடை காரணமாக வேலவனால் அமீரகம் வரமுடியாத சூழ்நிலை. வேறுவழியில்லாமல் பாரதியின் உடல் அமீரகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

பிழைக்க வந்த இடத்தில் தாய் இறந்துபோனதால் நிர்கதியான 10 மாத குழந்தையின் நிலையைக் கண்டு துணைத் தூதரகம் உதவிசெய்ய முன்வந்தது. இந்நிலையில், அமீரக வாழ் தமிழரும் அமீரகத்திற்கான திராவிட முன்னேற்ற கழக தலைவராக உள்ள எஸ்.எஸ் மீரான் தனது சொந்த செலவில் தேவேஷை தமிழகம் அனுப்பியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” துபாயில் உள்ள துணைத் தூதரகம் மூலமாக தேவேஷின் நிலையை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். தேவேஷை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்ப முழு செலவையும் நான் ஏற்பதாக வாக்குறுதி அளித்தேன். NOC வழங்குதல் போன்ற நடைமுறைகளை துணைத் தூதரகம் பார்த்துக்கொண்டது. தன்னார்வலர் ஒருவர் மூலமாக குழந்தையை தமிழகம் அழைத்துச்செல்ல நான் முடிவெடுத்தேன்” என்றார்.

வேலவனின் குடும்ப சூழ்நிலை கருதி உடனடியாக அவருக்கு உதவும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் உடனடியாக வேலவனுக்கு 3 லட்ச ரூபாய்களை இழப்பீடாக அளித்தும் முதல்வர் உத்தரவிட்டதாகவும் மீரான் தெரிவித்தார்.

நல்லுள்ளங்களின் சங்கமத்தால் தேவேஷ் சென்னை சென்று தனது தந்தையுடன் இணைந்தான். தனது சகோதரனிடம் தேவேஷ் விளையாடும் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தேவேஷ் அவனது குடும்பத்துடன் இணைந்ததை பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என மீரான் தெரிவித்தார். வேலனுக்கு ஹோட்டல் துறையில் விரைவில் வேலை ஒன்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் மீரான் வாக்குறுதியளித்திருக்கிறார்.

தங்களது கஷ்டத்தை அறிந்து உரிய நேரத்தில் உதவ முன்வந்த தமிழக முதல்வர் மற்றும் மீரான் அவர்களுக்கு வேலவன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

VELAVAN
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap