உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் எந்தெந்த நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பது குறித்து மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின்படி, 2.19 லட்சம் இந்திய மாணவர்கள் அமீரகம் படிக்கின்றதாகவும், உலகிலேயே அதிகளவில் இந்திய மாணவர்கள் படிக்கும் நாடாகவும் அமீரகம் உள்ளது.
2.15 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 2.11 லட்சம் இந்திய மாணவர்களுடன் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது.
92,383 இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா நான்காம் இடத்திலும், 80,800 இந்திய மாணவர்களுடன் சவுதி அரேபியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன. 55,465 இந்திய மாணவர்களை கொண்டுள்ள பிரிட்டன் ஆறாம் இடத்திலும், 43,600 இந்திய மாணவர்களுடன் ஓமன் ஏழாம் இடத்திலும் உள்ளன. எட்டாம் இடத்தில் உள்ள நியுசிலாந்தில் 30,000 இந்திய மாணவர்கள் பயில்கின்றனர்.
18,000 இந்திய மாணவர்களுடன் ஒன்பதாம் இடத்தில் உக்ரைனும், 16,500 இந்திய மாணவர்களுடன் பத்தாம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அடுத்த கல்வியாண்டில் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பேயின் போன்ற நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிக அளவில் செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.