கொரொனோ உலகின் வரலாற்றை வேறு திசைக்கு மடைமாற்றியிருக்கிறது. உலகமெங்கிலும் கொத்துக்கொத்தான மரணங்கள் நிகழ்ந்து மானுட சமுதாயத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதிலிருந்து உலகத்தை மீட்டெடுக்கும் விதமாக கொரோனாவிற்கு எதிரான மருந்து தயாரிப்பில் உலக நாடுகள் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா தடுப்பு மருந்திற்கான சோதனைகளை மூன்று கட்டங்களாக அறிவித்திருந்தது. முதல் இரண்டு சோதனை கட்டங்களும் சீனாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்ததைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் மூன்றாவது கட்டம் இன்று அமீரக தலைநகரமான அபுதாபியில் துவங்கியுள்ளது.
இந்த சோதனை மருந்தானது முதன்முதலில் அபுதாபி சுகாதாரத்துறை தலைவரான ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீது (Sheikh Abdullah bin Mohammed Al Hamed) அவர்களுக்கு இன்று காலை செலுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறையின் துணை செயலாளர் டாக்டர் ஜமால் அல் காபிக்கு (Jamal Al Kaabi) சோதனை மருந்தானது செலுத்தப்பட்டது.
عبد الله بن محمد آل حامد، رئيس دائرة الصحة بأبوظبي، أول متطوع يشارك في التجارب السريرية التي تجري في #أبوظبي للمرحلة الثالثة من اللقاح غير النشط لوباء كوفيد-19، يليه الدكتور جمال الكعبي، وكيل دائرة الصحة بالإنابة، وهو الأمر الذي يعكس التزام الإمارة بإيجاد علاج عالمي للوباء. pic.twitter.com/TX6AJPxJh3
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 16, 2020
3 ஆம் கட்ட சோதனை
இந்த மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன.
அபுதாபி மற்றும் அல் அய்னைச் சேர்ந்த 15,000 மக்கள் இந்த சோதனையில் பங்குபெற இருக்கிறார்கள். இந்த கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது விபரங்களை பதிவுசெய்ய வேண்டிய இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
3 முதல் 6 மாத காலம் நடைபெற இருக்கும் இந்த சோதனை முயற்சியில் அபுதாபியைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய கலீஃபா மெடிக்கல் சிட்டி CMO வின் அமீரக முதன்மை ஆய்வாளர் மற்றும் தேசிய கொரோனா ஆய்வக மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான டாக்டர் நவால் அகமது முகமது அல் காபி (Nawal Ahmed Mohamed Al Kaabi),” இந்த சோதனையில் 15,000 பேர் உட்படுத்தப்பட இருக்கிறார்கள். ஏமிராட்டிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமீரக குடியிருப்பாளர்களும் இந்த சோதனையில் பங்கேற்க இருக்கிறார்கள். முக்கியமாக இந்த சோதனை முயற்சிக்கு உட்பட முன்வருபவர்கள் ஆரோக்கியமாகவும், நெடுநாள் நோயாளிகளாக இல்லாமலும், முன்னர் கொரோனாவால் பாதிக்கப்படாதவராகவும் இருத்தல் வேண்டும்” என்றார்.
الدكتور جمال الكعبي، وكيل دائرة الصحة بالإنابة، ثاني متطوع يشارك في أولى التجارب السريرية العالمية للمرحلة الثالثة للقاح كوفيد-19 غير النشط، والتي انطلقت في #أبوظبي اليوم، وهي الأولى من نوعها والمدرجة تحت مظلة منظمة الصحة العالمية. pic.twitter.com/SB3i91fFct
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 16, 2020
சோதனைக்கு உட்பட முன்வரும் தன்னார்வலர்களை சேஹாவைச் சேர்ந்த சுகாதார பயிற்சியாளர்கள் பயிற்றுவிப்பார்கள். இந்த திட்டத்தின் முதல் பகுதியாக குறைந்தது 5000 பேரை இதில் ஈடுபடுத்த G42 குழுமமும் சேஹாவும் முயற்சித்துவருகிறது.
அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள சேஹாவால் இயக்கப்படும் 5 கிளினிக்குகள், மற்றும் மொபைல் கிளினிக்குகள் இந்த பரிசோதனை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
“200 நாடுகளைச் சேர்ந்த மக்களையும், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கும் அமீரகத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதால் இதில் வெற்றிபெறும் சாத்தியக்கூறும் அதிகம். கொரோனா நோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திவருகிறது அமீரகம்” என G42 சுகாதார குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆஷிஷ் கோஷி இன்று அபுதாபியில் காணொளிக் காட்சி மூலமாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கொரோனா எதிர்ப்பு மருந்து பரிசோதனையின் கடைசி நிலை இந்த 3 ஆம் பகுதிதான். இந்த பகுதியில் மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இருக்கிறார்கள். இந்த பகுதி முழுவதும் நடைபெறும் பரிசோதனையில் மருந்து பாதுகாப்பானது என உறுதிபடுத்தப்பட்டால் அதிக அளவில் அதனைத் தயாரிக்கும் நிலைக்கு இந்த திட்டம் முன்னேறும்.
முன்னர் சீனாவில் நடைபெற்ற சோதனையின் போது 28 நாட்களுக்குள் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட 2 டோஸ் மருத்துகளும் பங்குபெற்ற அனைவருக்குள்ளும் 100 சதவிகித ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே அபுதாபியில் 3 ஆம் பகுதி பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு மூன்று வாரத்திற்குள் 2 டோஸ் மருந்தானது செலுத்தப்பட்டு, அவர்கள் ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் கண்காணிக்கப்படுவார்கள்.
இந்த பரிசோதனையில் ஈடுபட சம்மதிப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியான நேரடி சந்திப்புகள் நடைபெறும் என அல் காபி தெரிவித்தார்.
முந்தைய பகுதி பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால் இந்த பரிசோதனையில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று மற்றும் மருந்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்காது என எதிர்பார்க்கிறோம் என அல் காபி தெரிவித்தார்.
கொரோனாவை வென்று அமீரகம் மற்றுமொரு சாதனையை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.