UAE Tamil Web

அமீரகத்தில் 2 வகையான புதிய விசாக்கள் அறிமுகம்: அமீரகத்திலிருந்தே வெளிநாடுகளில் பணிபுரியலாம்.. பலமுறை அமீரகம் வரலாம்..!

visa

அமீரகத்தில் நேற்று நடைபெற்ற கேபினெட் கூட்டத்தில் 2 வகையான புதிய விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த விசா வழங்குதலுக்கு அனுமதியளித்துள்ளார். அதன்படி Multi Entry Tourist Visa எனப்படும் பலமுறை அமீரகம் வந்துசெல்லும் வகையிலான புதிய சுற்றுலா விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, Remote Work Visa எனப்படும் தொலைதூர வேலை விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“அமீரகத்தினை உலகின் பொருளாதார மையமாக மாற்றும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நெகிழ்வான திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்திவருகிறது. உலகளவில் அமீரகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தோடு நாங்கள் உழைத்து வருகிறோம். நமது வளர்ச்சி நீடிக்கிறது” என துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.

தொலைதூர வேலை விசா

ஒருவருடம் செல்லுபடியாகும் இந்த விசா மூலமாக, அமீரகத்தில் இருந்துகொண்டே வெளிநாடுகளுக்குப் பணிபுரியலாம். விசாவில் குறிப்பிட்டுள்ளபடி நிபந்தனை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிபுரியலாம். அதேபோல, தங்களது சொந்த செலவில் இவ்விசா பெற்றவர்கள்அமீரகத்தில் வசிக்கலாம்.

அமீரகத்தின் பாதுகாப்பான மற்றும் தொழிலுக்கு உகந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிபுணர்களைக் கவரும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பயன்பாடுகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகள் இவர்களுக்கு வழங்கப்படும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது.

சமமான பணி – வாழ்க்கை எனும் சூழலை உருவாக்கவும் உற்பத்தித்திறன் மற்றும் தொழிலுக்கு உகந்த சூழலை அளிக்கவும் இத்திட்டம் உதவும். மேலும், இது ஊழியர்களின் அவர்களது டிஜிடல் திறனை அதிகரிக்கவும், வளர்ந்துவரும் கிக் பொருளாதாரத்திற்கு (gig economy) ஏற்ப மாறுவதற்கும் இத்திட்டம் நிச்சயம் பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை அமீரகம் வந்துசெல்லும் வகையிலான புதிய சுற்றுலா விசா

5 வருடங்களுக்கு செல்லுபடியாகும் இந்த விசாவின் மூலமாக அமீரகத்திற்குள் நுழைபவர்கள் 90 நாட்கள் வரை தங்கலாம். அதன்பின்னர் 90 நாட்களுக்கு தங்கும் காலத்தினை நீட்டிக்க அனுமதி வழங்கப்படும்.

விசாக்காலம் முடிவடைவதற்குள் இந்த விசா வைத்திருப்பவர்கள் எத்துணை முறை வேண்டுமானாலும் அமீரகம் வந்துசெல்லலாம். அனைத்து நாட்டினருக்கும் இந்த விசாவானது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap