கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த அன்னமடா பகுதியைச் சேர்ந்தவர் சிஜீஷ் சுப்ரமணியன். 41 வயதான இவர், துபாயில் உள்ள தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு மே 18ம் தேதி அல் அய்ன் அல் ஃபிகா பகுதியில் கார் ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக மற்றொரு கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிஜீஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

2 மாத தொடர் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டார். சிஜீஷின் சொந்த மாநிலமான கேரளாவில் உள்ள இந்தோ – அமெரிக்கா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிஜீஷிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி துபாயைச் சேர்ந்த வழக்கறிஞரான ஃபெமின் பன்னிகசேரி துபாய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் சிஜீஷின் நிலைமையை பரிசீலித்து அவருக்கு 3.1 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 6.20 கோடி ரூபாய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சிஜீஷிற்கு தொடர்ந்து கேரளாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
