34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயதுக் குழந்தை – மருத்துவர் எடுத்த துரித முடிவு!

dubai-expat,-girl-swallows-coin,-sharjah,-

ஷார்ஜாவில் 50 ஃபில் நாணயத்தை (50-fil coin) விழுங்கிய 3 வயதுக் குழந்தை, அதன் பெற்றோர்கள் மற்றும் அல் சாஹ்ரா மருத்துவமனையின் (Al Zahra Hospital) மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அயாத் இஸ்ரா (Ayat Isra) தவறுதலாக நாணயத்தை வாயில் போட்டிருக்கிறது.

இதுகுறித்து கலீஜ் செய்தி நிறுவனத்திடம் பேசிய குழந்தையின் தாய் ஷப்னாஸ் அசீஸ் (Shabnaz Aziz ),” நான் போனில் எனது தங்கையுடன் பேசிக்கொண்டிருந்த போது இஸ்ரா நாணயத்தை வாயில் போட்டத்தைப் பார்த்தேன். நான் உடனடியாக போனைத் துண்டித்துவிட்டு அவளிடம் ஓடினேன். அதற்குள்ளாக அவள் நாணயத்தை விழுங்கிவிட்டாள். இஸ்ராவிற்கு மூச்சுத்திணரத் துவங்கியது. நான் உடனடியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்த எனது கணவரை போனில் அழைத்து நிலைமையை விளக்கினேன். குழந்தையை தலைகீழாக பிடித்து குலுக்குவது போன்ற அவர் அளித்த யோசனைகள் பலனளிக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அவளால் சுவாசிக்க முடிந்தது. ஆனால் நாணயம் அவளுக்கு உறுத்தத் தொடங்கியது” என்றார்.

அசீஸ் உடனடியாக இஸ்ராவை, அல் சாஹ்ரா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அங்கே குழந்தை இஸ்ராவிற்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு குடலின் கீழ் பகுதியில் நாணயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விசாம் அல் தாமிர் (Dr Wissam Al Tamr) தலைமையில் எண்டோஸ்கோப்பி நடைமுறைகளை துரிதமாக மேற்கொண்டார் செரிமான மண்டல நிபுணரான டாக்டர் பிரித்வி பிரியதர்ஷினி. இருவரின் முயற்சியால் நாணயம் ஒரு நிமிடம் மற்றும் ஆறு வினாடிகளில் குழந்தையின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டது. கேஸ்ட்ரோகோபி சர்ஜரி (gastroscopy) நடந்த அன்றே குழந்தை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

“அதிர்ஷ்டவசமாக குழந்தை விழுங்கிய நாணயம் அவளது மூச்சு மற்றும் உணவுக்குழலில் சிக்காமல் நேரடியாக வயிற்றுக்குள் சென்றுவிட்டது. பெற்றோர் குழந்தையை உடனடியாக அவசர சிகிச்சையளிக்கும் அறைக்கு அழைத்து வந்ததால் எளிதாக நாணயம் அகற்ற முடிந்தது. எண்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி குழந்தையின் வயிற்றில் நாணயம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். இதனால் குறைவான நேரத்தில் நாணயத்தை அகற்ற முடிந்தது” என டாக்டர் பிரித்வி தெரிவித்தார்.

இதையும் படிங்க.!