34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் வேலையை இழந்து தவித்த 200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் சென்னை சென்றடைந்தனர்!

Some-residents-who-arrived-at-the-Dubai-Airport-early

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துச்செல்ல இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிகிழமை) அமீரகத்திலிருந்து 356 இந்தியர்கள் இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் சென்னை சென்றடைந்தனர். இதில் 200 பேர் பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள். கொரோனா பாதிப்பினால் வேலைகளை இழந்த இந்தியர்களும் இந்தப்பயணத்தின் வாயிலாக இந்தியா திரும்பியிருக்கின்றனர்.

கால தாமதம்

நேற்று பிற்பகல் 2.45 மணிக்கும், இரவு 7 மணிக்கும் புறப்படவிருந்த விமானங்கள் பலமணி நேர கால தாமதத்திற்குப் பிறகே தனது பயணத்தைத் துவங்கியது. இரவு 8.07 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 612 விமானத்தில் பயணித்த 176 நபர்களும், இரவு 9 மணிக்குக் கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 540 விமானத்தில் பயணம் செய்த 177 பேரும் நேற்றிரவே சென்னை சென்றடைந்தார்கள். இதில் 37 கர்ப்பிணிப் பெண்களும், 42 மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களும் இருந்ததாக துபாயில் இருக்கும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும்,” இவர்களைத்தவிர வயதானவர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் இவ்விமானத்தில் -பயணம் செய்தார்கள்” என தூதரகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uae-indian-expats,-chennai-flights,-coronavirus,-covid19,-mission-vande-bharat
Image Credit: (KT/Shihab)

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையிழந்து, நோய்த்தொற்று குறித்த அச்சத்தில் இருந்த பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் இந்த மீட்பு நடவடிக்கை மகிழ்ச்சியை அளித்துள்ளது. உதாரணமாக, கட்டுமானத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிவந்த ஜெயபிரகாஷ் சின்னப்பன் இந்தியா திரும்ப இருக்கிறார். 34 வயதாகும் சின்னப்பன் கொரோனா காரணமாக வேலையை இழந்தவர். இதுகுறித்து அவர் பேசும்போது,” கட்டுமானத் தொழில் நடைபெறாததால் நாள் முழுவதும் என்னுடைய அறையிலேயே தங்கியிருக்கிறேன். இப்படி காத்திருப்பதற்குப் பதிலாக நாடு திரும்பலாம். வருங்காலத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்பட்சத்தில் அமீரகத்திற்குத் திரும்புவேன்” என்றார்.

இதுபோல காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் சபரிநாதன்,” நான் தேராவில் இருக்கும் கடையொன்றில் வேலை செய்துவருகிறேன். எனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் என்னால் நாடு திரும்ப முடியாது. மேலும், என் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவளோடு இருக்க விரும்புகிறேன்” என்றார்.

நேற்று இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 8 இருக்கைகளுக்கு உரிய பயணிகள் வராததால் அந்த இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல குடியேற்ற விதிமுறைகள் காரணமாக பயணத்தைத் தொடர முடியாத நான்கு நபர்களின் இருக்கையும் பட்டியலில் உள்ள அடுத்த நான்கு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

flight
Image Credits- Khaleej Times

இதுகுறித்து தூதரகம்,” இப்படியான இடர் மிகுந்த காலத்தில் இயக்கப்படும் விமானங்களின் இருக்கைகள் காலியாக இருப்பதை அனுமதிக்க முடியாது. அதனால் பயணத்தைத் தொடர முடியாதவர்களின் இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், குடியேற்ற விதிமுறைகள் காரணமாக பயணிக்க முடியாமல் தவித்த ஒருவருக்கு உதவி செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

பயணிகளில் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களும் இருந்தார்கள். பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர் பேசும்போது,” எனக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது. அதற்காக நான் இந்தியாவில் சிகிச்சை எடுத்து வந்தேன். தற்போது நோயின் தீவிரம் அதிகமாகி வருவதால் இந்தியாவிற்குத் திரும்பி என்னுடைய சிகிச்சையைத்  தொடர இருக்கிறேன்” என்றார்.

வியாழனன்று அமீரகத்திலிருந்து, கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோட்டிற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 363 இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க.!