UAE Tamil Web

அமீரக வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : துணைத் தூதரகத்தில் 365 நாட்களும் இயங்கும் இலவச சேவை மையம் திறப்பு – என்னென்ன சேவைகள்? எப்படி விண்ணப்பிப்பது?

INDIAN-CONSULATE-

ஜூமெய்ரா லேக்ஸ் டவர் பகுதியில் இயங்கிவந்த பிரவசி பாரதிய சாஹித்யா கேந்திரா (PBSK) இனி துபாயில் உள்ள துணைத் தூதரக வளாகத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக வாழ் இந்தியர்களுக்கான ஆலோசனை மையமாக இயங்கி வந்த இந்த அமைப்பு இனி துணைத் தூதரகத்தின் கீழ் செயல்பட இருக்கிறது. வருடத்தின் 365 நாட்களும் இந்தியர்கள் இந்த மையத்திற்கு நேரடியாக வந்து சேவைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

துணைத் தூதரகத்தின் வளாகத்தில் உள்ள இந்த கட்டிடத்தை அமீரகத்திற்கான இந்தியத் தூதர் திரு.பவன் கபூர் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய தூதர்,” சிக்கலில் இருக்கும் இந்தியர்கள் குறிப்பாக நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கான சட்ட, மனநல மற்றும் பொருளாதார ஆலோசனைகளை இம்மையம் வருடம் முழுவதும் இலவசமாக வழங்க இருக்கிறது” என்றார்.

மேலும், இப்புதிய மையம் திறக்கப்படுவதற்கான தேவைகள் குறித்துப் பேசிய கபூர்,” மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இந்த அமைப்பு உதவும்” என்றார்.

-INDIAN-CONSULATE-
Image Credit: Virendra Saklani/Gulf News

24×7 இலவச உதவித் தொலைபேசி சேவை (80046342) உட்பட இந்த ஆலோசனை உதவிகளும் PBSK அமைப்பினால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

சேவை பெறும் நேரம்

ஞாயிறு – வியாழன் வரையிலான நாட்களில் – காலை 9 – மாலை 6 மணி வரையிலும்.

வெள்ளி, சனி மற்றும் விடுமுறை தினங்களில் – மதியம் 2 மணிமுதல் – மாலை 6 மணி வரையிலும் சேவையானது வழங்கப்படும்.

முன்னதாக வாரத்தில் 6 நாட்கள் மட்டும் மதியம் 3 மணிமுதல் இரவு 7 மணி வரையிலும் சேவைகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

5 மொழிகள்

இந்த ஆலோசனை மையங்களில் பணியாற்ற கூடுதல் பணியாளர்களை நியமித்திருப்பதாகவும் புதிய கவுண்டர்கள் துவங்கப்பட்டிருப்பதாவும் கபூர் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 5 மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது.

இலவச சட்ட உதவிகள்

இலவச சட்ட உதவி சேவைகளை வழங்க 7 வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், மக்களுடைய நலனுக்காக அவர்கள் இமையத்தில் பணியாற்ற இருப்பதாகவும் துணைத் தூதரக தலைமை அதிகாரி டாக்டர் அமன் பூரி தெரிவித்தார்.

“இந்த இலவச சட்ட உதவி சேவைகளை விரிவாக்கி, வழக்கறிஞர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதன் மூலம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சேவைகளை வழங்க இருக்கிறோம். அதேபோல, வாரத்தின் 3 – 4 நாட்களுக்கு மன நல சேவையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என பூரி தெரிவித்தார்.

முன்னதாக சட்ட உதவி சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. அதேபோல, மனநல உதவி சேவைகள் வாரத்திற்கு 2 – 3 நாட்கள் மட்டுமே முன் அனுமதி பெறுவதன் அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தன. “அவசர உதவி தேவைப்படுவோர் நேரடியாக இந்த மையத்திற்கு வரலாம். மற்றவர்கள் கொரோனாவை கணக்கில் கொண்டு சேவை பெற முன்னனுமதி பெறுதல் வேண்டும்” என பூரி குறிப்பிட்டார்.

கொரோனா தோற்று துவங்குவதற்கு முன்னர் ஒவ்வொரு மாதமும் 450 – 500 இந்தியர்கள் இந்த மையங்களுக்கு வருகை புரிவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தை எட்டிய பொழுது, மக்கள் நேரடியாக வரத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஒரு மாதத்திற்கு 8000 அழைப்புகள் வந்திருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக 3,000 – 3,500 அழைப்புகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினமும் துணைத் தூதரகத்தின் அவசர அழைப்பு எண்ணிற்கு 70 – 80 அழைப்புகள் வருவதாக பூரி குறிப்பிட்டார்.

-INDIAN-CONSULATE-4
Image Credit: Virendra Saklani/Gulf News

“கொரோனா காலத்தில் குவாரண்டைன் மற்றும் நாடு திரும்புதல் குறித்து எங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வந்தன. வழக்கமாக நாங்கள் அளிக்கும் உதவிகளில் இருந்து அவை மாறுபட்டவை” என கபூர் தெரிவித்தார்.

தொடர்புக்கு

அமீரக வாழ் இந்தியர்கள் கீழ்கண்ட வழிமுறைகளில்  PBSK யிடமிருந்து தங்களுக்கான சேவைகளைப் பெறலாம்.

வாட்சாப் : 0543090571

இணையதளம் :  pbsk.cgidubai.gov.in 

மின்னஞ்சல் முகவரி : pbsk.dubai@mea.gov.in

ட்விட்டர் : @pbskdubai

அபுதாபியில் இருந்து அழைக்கும் இந்தியர்கள் நேரடியாக அபுதாபியில் உள்ள தூதரகத்திடம் இருந்து சேவை பெற வேண்டிய உதவிகள் செய்துதரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்திற்கு வரும் அழைப்புகளில் எளிதான சேவைகள் உடனுக்குடன் வழங்கப்படும் எனவும் சற்றே சிக்கலான சேவைகள் தூதரக/துணைத் தூதரகத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நேரடியாக துணைத் தூதரகமே இந்த சேவைகளை வழங்க இருப்பதால் தனி நிறுவனங்களை இதற்காக நியமிப்பதும், அதற்காக பணம் செலவழிப்பதும் மிச்சமாகிறது” என கபூர் தெரிவித்தார்.

PBSK யின் செயல்பாடுகள் இந்திய சமூக நல நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மையம் மூலமாக அமீரக வாழ் இந்தியர்களுக்கான சேவைகள் விரைவாகவும், சரியான முறையிலும் கிடைக்கும். இந்திய சமூக மக்களிடையே இம்மையம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என தூதர் மற்றும் துணைத் தூதர் அமீரக வாழ் இந்தியர்களை வலியுறுத்தியுள்ளனர்.